Friday, January 4, 2013

கூடங்குளம் அணு உலையைத் திற!


கூடங்குளம் அணு உலையைத் திற!

          கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்திக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆனபின்பும், எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலமும் எப்படியாவது அணு உலையை மூடிவிடவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசாங்கமோ நட்ட ஈடு, மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை தீர்த்துவைத்து, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அணுமின் நிலையத்தை திறப்பதற்கு முழுமுயற்சி செய்யவில்லை. உச்சநீதிமன்றம் அணுசக்தி அரசியலையோ, தொண்டு நிறுவனங்களின் உள்ளார்ந்த நோக்கங்களையோ புரிந்துகொள்ள மறுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அணு உலையை மூடச்சொல்வோம் எனக் கூறியது. அணு உலை மீதானத் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு என்பது சிந்துபாத் கன்னித்தீவு கதைப்போல் தொடர்கிறது.


       அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான் என்றும், அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது ஆபத்து என்றும் கிறித்துவத் திருச்சபைகளும், தொண்டுநிறுவனங்களும், அமெரிக்காவின் இராணுவ விஞ்ஞானிகளும் அணு விஞ்ஞானத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். பூமி தட்டைதான் என்றும், நெருப்பு கண்டிபிடிப்பை எதிர்த்தும் விஞ்ஞானிகளை கொன்றொழித்த இந்த பிற்போக்கு சக்திகள்தான் இன்று அணுசக்தியை எதிர்க்கின்றன. அணுசக்திக்கு எதிராக அவர்கள் எழுப்புகின்ற அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லை என்று இந்த ஞானசூன்யங்கள் பேசித்திரிகின்றன.

       சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளின்போது அணு உலையை பாதுகாக்க முடியாது. அதுசமயம் உலைவெடித்து கதிர்வீச்சு காரணமாக கடும் உயிர்சேதம் ஏற்படும் என்றும்; அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளிலிருந்து பல ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சு அபாயம் இருக்கும் என்றும் அணுசக்திக்கு எதிராக பீதியூட்டி, அச்சுறுத்தி அணு உலை கூடாது என்று போராடி வருகின்றனர். அணுசக்தியை மின்சக்தியாக மாற்றவே முடியாது என்றும் அணுசக்தி விஞ்ஞானம் காலாவதியாகிவிட்டது என்றும் கூறி விஞ்ஞானத்திற்கு எதிராக போராடுகின்றனர்.

பூகம்பத்தையும், புயலையும் எதிர்கொள்ளும் அணு உலைகள்

       ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச்சில் ஏற்பட்ட சுனாமியால் அணு உலை உருகி மக்கள் மாண்டுபோயினர் என்று கூறி கதிர்வீச்சு பீதியூட்டுகின்றனர். ஆனால் ஜப்பானில் புகுஷிமாவில் அணு உலை உருகியதற்கு சுனாமி காரணம் அல்ல என்றும், அதற்கு முழுக்க முழுக்க மனிதத் தவறுகள்தான் காரணம் என்று அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வறிக்கைக் கூறுகிறது. புகுஷிமா அணு உலைகளில் தனியார் முதலாளிகளின் இலாபவெறியால் பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஏற்பாடுகள், விதிகள் சரிவர கடைபிடிக்கப்படாததும், அணு உலை துருப்பிடித்துவிடும் என்ற காரணத்தினால் கடல் நீரைக் கொண்டு அணு உலையை குளிரூட்டுவதற்குத் தடைவிதித்ததுதான் கதிர்வீச்சுக்கு காரணமாக அமைந்து விட்டது. அண்மையில் கூட ஜப்பானில் ஏற்பட்ட அதே அளவு பூகம்பத்தின்போது அணு உலைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் வீசிய சண்டிப் புயலின்போது கூட எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அணு உலைகள் பாதுகாப்புடன் இயங்கிக்கொண்டுதான் உள்ளது. அணுகுண்டு பாதிப்பிற்கும், அணு உலை கதிர்வீச்சுக்கும் ஆளான ஜப்பான் நாட்டுமக்களே தற்போது அணு உலை ஆதரவாளர்களைத்தான் ஆட்சியில் அமரவைத்துள்ளனர். தகுந்த பாதுகாப்புடன் அணு உலைகளை இயக்குவோம் என்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்துவிட்டது. ஏன்! நமது கல்பாக்கம் அணு உலை பலதலைமுறைகளைக் கடந்து - பல புயல்களையும் சுனாமியையும் சந்தித்து தலைநிமிர்ந்து இயங்கிக்கொண்டுதான் உள்ளது.

அணுக் கழிவு ஆபத்து என்பதும் பீதியே!

       அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஆபத்து என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். அணுக் கழிவை என்ன செய்யப் போகிறீர்கள் என்று உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்புகிறது. கர்நாடக கோலார் சுரங்கத்தில் கூடங்குள அணுக் கழிவுகளை வைப்பதை எதிர்த்து அம்மாநில மக்கள் போரடியதால் மத்திய அரசு அந்தத்திட்டத்தை கைவிட்டுள்ளது. அணுக்கழிவுகளால் மாபெரும் ஆபத்து என்று மக்களை நம்பவைத்துள்ளனர் அணு உலை எதிர்ப்பாளர்கள். ஆனால் அணுக்கழிவுகள் உண்மையில் ஆபத்து நிறைந்தத்துதானா?

       இல்லை என்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சேகர்பாசு கூறுகிறார். அணு உலைகளில் யுரேனியம் எரிக்கப்பட்டு கழிவாக வெளியேறும் அனைத்தும் பயன்படுத்தமுடியாத கழிவுகள் அல்ல. அந்தக்கழிவுகளை சுத்திகரித்து, வீரியப்படுத்தி புளூடோனியமாக மாற்றி மறுசுழற்சி மூலம் மீண்டும் எரிபொருளாக 98 சதவீதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே கழிவுகளாகும். அனல் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளோடு ஒப்பிடும்போது அணுமின் நிலையங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் 30,000 மடங்குக் குறைவாகும். உண்மையில் நிலக்கரி சாம்பலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுதான் சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடுகளை விளைவிக்கின்றன.

       அணு உலைக் கழிவுகளை மிகக் குறைவான இந்தக் கழிவுகளைப் பாதுகாப்பான இரும்புப் பெட்டகத்தில் வைத்து, பூமிக்கு அடியில் ஆழத்தில் மிகவும் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்படுகிறது. அணுக் கழிவுகளில் 99 சதவீதம் அணுக்கதிர்வீச்சை வெளியிடுபவை அல்ல. ஒரு சதவீதம்தான் கதிர்வீச்சுத் தன்மை வாய்ந்தது. அதையும் பிரித்தெடுத்து உயர் அழுத்த அணு உலைகளில் போட்டு உடைத்து அதன் வீரியத்தை அழிக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியா அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் சேகர்பாசு கூறுகிறார். மாறாக அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் கார்பனால்தான் புவி வெப்பமடைந்து, பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து பலநாடுகளில் மீனவ கிராமங்கள் நீரில் மூழ்கிப்போகும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க 2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 25 அணு உலைகளைக் கட்டவேண்டும் என்று சர்வதேசிய அணுசக்திக் கழகம் முடிவெடுத்திருந்திருந்தது. தற்போது அணு உலைகளை மூடவேண்டும் என்பதன் மூலம் மீனவ மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். மீனவ நண்பனாக நடித்து அம்மக்களுக்கு எதிராக சகுனிபோல் செயல்படுகிறார் சுப.உதயகுமார். இவ்வாறு புயலையும் பூகம்பத்தையும் வைத்து அச்சுறுத்தி அணு உலைக்கு எதிராக போராடுகிறார்கள்.

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளும் அணு உலைகளும்

       அணுசக்தி தொழில்நுட்பங்கள் காலாவதியாகி விட்டது. அதை பயன்படுத்தவே முடியாது. எனவேதான் புகுஷிமாவிற்குப் பிறகு உலகின் பலநாடுகள் அணு உலைகளை மூடப்போவதாக அறிவித்துவிட்டன. இத்தகைய சூழலில் இந்தியாவில் அணு உலையை துவங்கக்கூடாது என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். அணு உலைகளை மூடுவது என்பது புகுஷிமாவிற்கு முன்பே துவங்கிவிட்டது. அவ்வாறு அணு உலைகள் மூடப்படுவதற்கு தொழில்நுட்பங்கள் காரணம் அல்ல. இன்று உலகில் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகள்தான் உண்மையானக் காரணமாகும்.

       2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ மிகைஉற்பத்தி நெருக்கடி, ஐரோப்பா, ஜப்பான் என்று அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. தீர்வுகாண முடியாமல் பொருளாதார நெருக்கடி தொடர்வதால் கடன் சந்தை அருகிப் போவது, அரசாங்க கஜானா காலியாகிவிட்டதால் அரசின் உதவி அணு உலைகளுக்கு கிடைக்காமல் போவது போன்றக் காரணங்களால் அணு உலைகள் அமைப்பதற்கான திட்ட செலவினங்கள் கட்டுப்படியாகாமல் போகிறது. பிரான்ஸ் நாட்டின் அரேவா நிறுவனம் 1650 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பிற்கு 2005ல் 3.3 பில்லியன் யூரோ என விலையை தீர்மானித்தது. ஆனால் 2010ல் அதன் விலை 8.5 பில்லியன் யூரோ என 3 மடங்கு உயர்ந்துவிட்டது. எனவே அணுசக்தியை பயன்படுத்த முடியாத அளவிற்கு முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ளது. முதலாளித்துவப் பொது நெருக்கடியின் காரணமாக எப்படி பல்வேறு தொழில்கள் நலிவடைந்து மூடப்படுகிறதோ அதே கதிதான் அணு உலைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அணு உலைகளை மூடுவது என்று அனைத்து நாடுகளும் முடிவெடுக்கவில்லை. ஜப்பான் தனது நிலையை மாற்றிக்கொண்டுவிட்டது. ரஷ்யா, சீனா, பிரேசில், இத்தாலி, தென்கொரியா போன்ற நாடுகள் புதிதாக பல அணு உலைகளை அமைத்து வருகின்றன. எனவே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி அணு உலைகளை மூடுவதல்ல, மாறாக முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து பாட்டாளிவர்க்கப் புரட்சியை - தேசிய விடுதலைப் புரட்சியை முன்னெடுப்பதுதான் ஒரே வழி. அதை விடுத்து தொழில்நுட்பத்திற்கு எதிராக போரிடுவது வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பி ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பாதுகாக்கும்  துரோகமே யாகும். உண்மையில் கதிர்வீச்சு அபாயம், கழிவுகள் பாதுகாப்பு என்று கூறி நடத்தப்படும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்குப் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நலன்கள் ஒளிந்துகிடக்கின்றது.

அமெரிக்காவின் புதிய காலனியாக இந்தியாவை மாற்றும் அணுசக்தி இராணுவ ஒப்பந்தங்கள்

       அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆரம்பம் முதலே கூடங்குளம் அணு உலையை எதிர்த்தே வந்துள்ளனர். இந்திராகாந்தியின் காலத்தின் போதும், பின்னர் வாஜ்பாய் ஆட்சியின் போதும் இந்தியா தமது தற்காப்பிற்காக அணு குண்டு சோதனை செய்ததை எதிர்த்து அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் இந்தியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதை முறியடிக்கவே சோவியத் ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கூடங்குள திட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றவும் இந்தியாவில் தமது புதியகாலனிய ஆதிக்கத்தை நிறுவவும் இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களை போட்டபின்பே அந்தத் தடைகளை அமெரிக்கா நீக்கியது.

       அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் ஆற்றல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு சேவைசெய்கிறது. இந்தியா அணுசோதனை செய்யக்கூடாது. இந்தியாவின் அணுமின் நிலையங்களை அமெரிக்காவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும். இந்தியாவின் சுயேட்சையான மூன்றுகட்ட அணுமின் திட்டத்தை கட்டுப்படுத்துவது, ஈரானிடமிருந்து இந்தியா எண்ணெய் எரிவாயு இறக்குமதியை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொருளாதாரம் அல்லாத அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றவாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற அரசியல் நிபந்தனைகளையும் ஏற்றபிறகுதான் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவித்தது.

       அணுசக்தி ஒப்பந்தம் போட்டபின்பும் அமெரிக்காவால் இந்தியாவில் ஒரு அணு உலை கூட தொடங்கமுடியவில்லை. இந்தியச் சட்டப்படி அணு உலையில் விபத்து நடந்தால் நட்ட ஈடு ரூ.500 கோடி வழங்கவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்ததே அமெரிக்கா அணு உலை நிறுவ முடியாததற்கு காரணமாக இருந்தது. கூடங்குளத்தில் ரசியா அப்படி எந்த நட்ட ஈட்டையும் கொடுக்காமல் அணுமின் நிலையத்தை அமைத்து வருகிறது. எனவே தங்களுக்கும் அந்த சலுகை வேண்டும் என்று அமெரிக்கா வாதிடுகிறது. கூடங்குளத்தில் ரசியாவும்; ஜெய்தாபூரில் பிரான்சும் அமைக்கும் அணு உலைகளை ஒழித்தால்தான் இந்தியச் சந்தையை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியும் என்று அமெரிக்கா தமது அடிவருடிகள் மூலம் எதிர்ப்புப் போராட்டங்களை திட்டமிட்டு நடத்திவருகிறது. ரசியாவோ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தபோது இந்தியாவில் அனைத்து உலைகளுக்கும் யுரேனியம் வழங்குவது என்ற அடிப்படையில் கூடங்குளம் ஒப்பந்தம் போட்டோம். எங்களை மற்றவர்களோடு ஒப்பிடக்கூடாது என்று கூறியும், நட்ட ஈட்டு தொகை வழங்கினால் அணு உலை திட்ட செலவினங்கள் அதிகரிக்கும் என்று கூறியும் நட்ட ஈடு வழங்க மறுக்கிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவின் ஆற்றல் துறையின் மீது தமது மேலாதிக்கத்திற்காகவே கூடங்குளம் அணு உலையை எதிர்த்தப் போராட்டத்திற்கு ஊக்கமுடன் ஆதரவளித்து வருகிறது.

பேரழிவு ஆயுதங்கள் ஒழிப்பு எனும் பேரில் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம்

       அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் உலகை பலமுறை அழிக்கவல்ல அணு ஆயுத ஏகபோகத்தை வைத்துக்கொண்டு உலக மக்களையே அச்சுறுத்திவருகின்றனர். தமக்கு அடங்கி நடக்கும் நாடுகள் அணு ஆயுதம் வைத்திருப்பதை மறைமுகமாக ஆதரிக்கும் இந்த நாடுகள், தமக்கு அடிபணியாத நாடுகள் அணுமின்சாரம் தயாரிப்பதைக் கூட அங்கீகரிக்க மறுக்கின்றன. மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்க நாடுகளில் கிடைக்கும் எண்ணெய், எரிவாயு ஆற்றல்கள் மீது தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டவுமே ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, பயங்கரவாதத்தை அழிப்பது எனும் பேரில் இராணுவ ரீதியில் தலையிட்டு - அந்நாட்டு அரசுகளை கவிழ்த்து அங்கு ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியுள்ளது.

       “அரபு வசந்தம் என்ற பேரில் தமது அடிவருடி அரசுகளையும்கூட கவிழ்க்கிறது அமெரிக்கா. எகிப்து, லிபியா, ஏமன் போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தமது கைப்பாவை ஆட்சிகளை உருவாக்கியுள்ளது. புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தி உலகமுதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை தங்கள் மீது திணிப்பதை எதிர்த்தும், அந்நாடுகளின் சர்வாதிகார அரசுகளை எதிர்த்தும் அந்நாட்டு மக்கள் போராடியதை பயன்படுத்திக்கொண்டு தொண்டு நிறுவனங்களின் மூலம் அப்போராட்டங்களை தமக்கு சாதகமாக அமெரிக்கா மாற்றிக்கொண்டது. மனித உரிமை மீட்பு, ஜனநாயகம் காப்பு, ஊழல் ஒழிப்பு எனும் பேரில் உலகில் எந்த ஒரு நாட்டிலும் தலையிடுவேன் என்று அமெரிக்கா வெளிப்படையாகவே அறிவித்து செயல்பட்டு வருகிறது. இதற்கு தொண்டுநிறுவனங்கள் சேவை செய்கின்றன.

       அண்மையில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் அந்நாட்டு அரசாங்கம் தனியார் மயமாக்கத்தை ஒழித்து தேசியமயமாக்கல் கொள்கைகளையும், சர்வதேச நிறுவனங்களின் கொள்ளைக்கார கொள்கைகளை மாற்றி புதியக் கொள்கைகளையும் அந்த அரசு செயல்படுத்துகிறது. அங்கு அரசாங்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நடத்திவரும் போராட்டத்தை அரபு வசந்தம் என்றழைத்து அப்போராட்டத்தை உயர்மட்டத்தில் இருப்பவர்களின் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும், உயர்பீடத்தில் நிகழும் மாபெரும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களாகவும் சித்தரித்து அரசு கவிழ்ப்பு நடவடிக்கையில் அமெரிக்காவும், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதற்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவைகளாக செயல்படும் தொண்டுநிறுவனங்கள்

       இந்தியாவிலும் கூட அமெரிக்காவின் ஆதரவு மன்மோகன் கும்பலின் ஆட்சியை தமது நலன்களுக்கு முழுமையாக பணியவைப்பதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்கவும், மக்களின் போராட்டம் புரட்சிப் போராட்டமாக மாறினால் அதைப் பயன்படுத்தி தமது அடிவருடிகளின் பொம்மை ஆட்சியை உருவாக்கவும் தொண்டு நிறுவனங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. அன்னா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கமும், சுப.உதயகுமார் தலைமையிலான கூடங்குளம் எதிர்ப்பு இயக்கமும், கேசரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இத்தகைய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்ற ஒரு ஐந்தாம்படை அமைப்புகள்தான்.

       அமெரிக்காவின் அணு ஆயுதத்தை ஒரு போதும் எதிர்க்காத சுப.உதயகுமார், அமெரிக்க-இந்திய இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேசாத உதயகுமார், ரசியாவுடனான ஒப்பந்தங்களை நாட்டின் மீதான ஆதிக்கம் என்று எதிர்ப்பதும் கூடங்குளம் ஆபத்து என்று எதிர்ப்பதும் அமெரிக்காவிற்கு ஆதரவு என்பதைத்தவிர வேறென்ன. ஊழல் ஒழிப்பு பேசுகின்ற அன்னா அசாரே, கேசரிவால் போன்றவர்கள் ஊழல் புரிகின்ற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், அதற்கு கடுமையான சட்டம் தேவை என்று கூறுகின்றனர். ஆனால் ஊழலுக்குக் காரணமான பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டுத் தரகுமுதலாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூறுவதில்லை. அண்மையில் சில்லரை வர்த்தகத்தில் நுழைவதற்கு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியர்களுக்கு ரூ.125 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளது. இந்த ஊழல் எதிர்ப்பு சாகசக்காரர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இராணுவ அதிகாரிகள் வடகிழக்கு மாகாணங்களில் பெண்களை கற்பழித்து கொலைசெய்வதை எதிர்க்காதவர்கள், இராணுவ சிறப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடாமல், சாதிய வெறியர்கள் கௌரவக் கொலைகள் புரிவதை எதிர்க்க மறுப்பவர்கள் டில்லிப் பெண்ணின் மீதான பாலியல் பலாத்காரத்தை எதிர்ப்பது எல்லாம் வெற்று அரசியல்தான். இத்தகைய போராட்டங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆட்சியை நிறுவ இந்திய மக்களை திரட்டுகின்ற தேசத்துரோகம்தான்.

தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடு, கூடங்குளத்தை உடனே திற!

       மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பல் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு அந்நிய நாட்டிலிருந்து பணம் வருகிறது என்று கூறினாலும் அதை எதிர்த்து உறுதியான நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தற்போது அந்நிய நிதி உதவியை தவறாக பயன்படுத்தும் தொண்டு நிறுவனங்களைத் தடை செய்யப் போவதாகக் கூறுகிறது. ஆனால் அந்நிய நாட்டிலிருந்து நிதி உதவிபெறும் அனைத்து அமைப்புகளையும் தடைசெய்யவும் நிதி உதவியை தடுத்து நிறுத்தவும் மறுக்கிறது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. அயலுறவு ஒப்பந்தங்களை செய்துகொள்ள அரசுக்கு அதிகாரமுண்டு என்று பேசிய மன்மோகன் கும்பல் ஏன் ரசியாவுடனான ஒப்பந்தங்களை நீதிமன்றத்தில் விவாதிக்க அனுமதித்தது. நாம் கூறுவது அனைத்து அயலுறவு ஒப்பந்தங்களையும் மக்கள் மன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான்.

       அமெரிக்காவுடனான அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்கள்தான் இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாகவும், ஆற்றல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் அமெரிக்காவின் ஏகபோகத்தை நிறுவவும்  இந்தியாவின் சுயேச்சையான மின் திட்டங்களை ஒழிக்கக் கூடியதுமாகும். ரசியாவுடனான கூடங்குள அணு உலைகள் ஒப்பந்தம் ஏகாதிபத்திய நலன்கள் அடிப்படையில் இருந்தபோதிலும் அதில் இந்தியாவின் மீது காலனியாதிக்கம் செலுத்தக்கூடிய அல்லது மேலாதிக்கம் செலுத்தக்கூடிய அமெரிக்காவின் ஹைட் சட்டம் போன்ற நிபந்தனைகள் இல்லை. எனவே அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களை ஒழித்து - கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதுதான் இந்திய மக்களின் நலன்களை காக்கும் ஒரே வழியாகும். அதே சமயம் ரசியா, பிரான்ஸ் உதவியுடன் திறக்கபப்டும் அணுமின் உலைகளுக்கான நட்ட ஈட்டையும், பாதுகாப்பையும் அந்நிறுவனங்கள் உத்திரவாதம் செய்யவேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றவேண்டும் என்ற உத்திரவாதத்துடன் இந்த அணு உலைகளைத் திறக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

       நாட்டில் நிலவும் மின் பற்றாக் குறையால் வேளாண்மை அழிந்து விவசாயிகள் தற்கொலை புரிந்து வரும் சூழலில், சிறு தொழில்கள் விசைத் தறிகள் நலிவடைந்து அழிந்துவரும் சூழலில், சில்லரை வணிகம், மின்வெட்டால் பாதித்துவரும் இன்றைய சூழலில் கூடங்குளம் அணு உலையை திறந்து இயக்கிக்கொண்டு மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்தவேண்டும். ஏற்கெனவே பாதுகாப்பு பிரச்சினையில் 17 அம்சங்களில் 10 அம்சங்களை நிறைவேற்றியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. எனவே மீதியுள்ள 7 அம்சங்களையும் உலையை இயக்கிக்கொண்டே தீர்க்கமுடியும். அவ்வாறு தீர்ப்பதற்கு மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கமிட்டி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பேசித் தீர்க்கவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டும்.

மத்திய அரசே! தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கு

       தமிழகத்தை ஆளும் ஜெயா அரசாங்கம் ஆரம்பத்தில் கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்களை ஆதரித்தது. தற்போது கூடங்குளம் அணு உலையை திறப்பதை ஆதரிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டு கூடங்குளம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத்திற்கே கொடுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் கோருகிறது. மத்திய அரசிடம் 2,000 மெகாவாட் உபரி மின்சாரம் இருக்கின்ற சூழலில், தமிழகத்தின் 4,000 மெகாவாட் மின்பற்றக் குறையால் பொருளாதார சமூக வாழ்க்கை கடுமையாக பாதித்து வரும் சூழலில் தற்காலிகமாக மத்திய அரசு தமிழகத்திற்கு அனைத்து மின்சாரத்தையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்மக்களின் சார்பாக கோருவது நியாயமானதும் அவசியமானதுமாகும்.

       எனவே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதரவு தொண்டு நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கூடங்குளம் அணு உலையை உடனடியாகத் திறக்கவேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நட்ட ஈட்டை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பலின் ஆட்சியை எதிர்த்து கீழ்க்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் அணிதிரள வேண்டும் என்று அறை கூவி அழைக்கின்றோம்.

    «  கூடங்குளம் அணு உலையைத் திற!

«  மக்களுக்கான பாதுகாப்பு, இழப்பீட்டை உத்தரவாதம் செய்!

«  அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளை, அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளுடன் பேசித் தீர்வுகாண்!

«  அணு உலை மீதான தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை எடு!

«  தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நிதி வருவதைத் தடைசெய்!

மக்கள் ஜனநாய இளைஞர் கழகம், தமிழ்நாடு

ஜனவரி 2013

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.