செப்டம்பர்-12, தியாகிகள் தினம்!
தோழர் பாலன் நினைவு நீடுழி வாழ்க!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
1980 செப்டம்பர் 12ல், தருமபுரியில் புரட்சித் தோழர் பாலன் படுகொலை செய்யப்பட்ட நாளை ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக கடைபிடித்து வருகிறோம். 1947 ஆகஸ்ட் போலிச் சுதந்திரத்தை எதிர்த்து உண்மைச் சுதந்திரத்தை வேண்டியும், நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதித் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த தோழர்கள் சாரு, எல்.அப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நக்சல்பாரி தோழர்களின் தியாகத்தை போற்றும் நாளே இந்நாள். அத்துடன் 1947க்கு முன்பும், பின்பும் இந்திய நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளின் கனவை நனவாக்க சபதம் ஏற்கும் நாளே இந்நாள்.
நாட்டை ஆளும் மன்மோகன் சோனியா கும்பல் அமெரிக்காவிற்கு இந்தியாவை அடிமைப்படுத்துவதில் நான்கு கால் பாய்ச்சலில் பயணம் செய்கிறது. உலகமயம் மற்றும் தனியார்மயக் கொள்கைகள் மூலம் நாட்டின் விலை மதிக்க முடியாத இயற்கை மற்றும் கனிம வளங்களை பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளி களுக்கு தாரை வார்த்து நாட்டின் கஜானாவுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய்களை மடைமாற்றிவிட்டு, லஞ்ச ஊழலில் திளைப்பதில் எட்டுக்கால் பாய்ச்சலில் அதன் உச்சத்தையே எட்டிவிட்டது. இவ்வாறு நாட்டிற்கும், மக்களுக்கும் துரோகம் செய்வதே சோனியா காங்கிரசின் அடிப்படைக் கொள்கையாக ஆகிவிட்டது.
சில்லரை வணிகத்திற்கு சமாதி
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளான மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளும், தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் திறந்துவிட வேண்டும் என மிரட்டுகின்றன. மன்மோகன் கும்பலோ அந்நிய மூலதனத்திற்கு அனைத்துத் துறைகளையும் குறிப்பாக சில்லரை வணிகத்தை உடனே திறப்பதற்கு கருத்தொற்றுமை வேண்டி கண்ணீர் வடிக்கிறது. அண்மை ஆண்டுகளில் இந்தியாவிலும், உலக முழுவதிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உலகமய, தனியார்மயக் கொள்கைகள்தான் காரணம் என்பதை மன்மோகன் கும்பல் ஒத்துக்கொள்கிறது. ஆனால் மான வெட்கமின்றி அதேக் கொள்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. வால்மார்ட் போன்ற அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளை திறந்துவிடுவதால் இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 20 கோடி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும். அத்துடன் சிறுதொழில்கள், கைத்தொழில்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல லட்சம் பேர் வாழ்வுரிமை இழந்து நடுத்தெருவில் நிற்பர். இவ்வாறு மன்மோகன் கும்பல் அமெரிக்காவிற்கு அடிபணிந்து நாட்டுமக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது.
விவசாயிகளின் தற்கொலை பெருகுகிறது
உலகமயக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் நிலமற்ற ஏழை விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இந்திய அரசு நிலச்சீர்திருத்தத்தைக் கைவிட்டு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் 1000 ஏக்கர் பெரும்பண்ணைகள் அமைத்து குழும விவசாயத்திற்கு வழிவகுத்ததே அதற்கு காரணம். கோயில், மடங்கள் பெயரில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துள்ளதை ஒழிக்கவே இல்லை. இந்திய அரசு செயல்படுத்திவரும் புதியகாலனிய வேளாண் கொள்கைகள் மேற்கண்ட பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் குழும விவசாயத்திற்கே சேவை செய்கிறது.
வேளாண் பொருட்களின் இறக்குமதிக்கு இருந்தக் கட்டுப்பாடுகளை ஒழித்து மலிவான விலையில் ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவில் வேளாண் பொருட்களை கொட்டிக் குவிக்க அனுமதித்தல்; விவசாயிகளுக்கான மானியங்களை வெட்டுதல்; விதைகள், வேளாண் ஆராய்ச்சி, உயிரியல் காப்புரிமை சட்டங்கள்; உரவிலை கட்டுப்பாட்டை அரசு கைவிடுதல் போன்ற புதியகாலனிய வேளாண் கொள்கைகள் வேளாண்மைத் துறைமீது மான்சாண்டோ, கார்கில் போன்ற அமெரிக்க கம்பெனிகளின் ஆதிக்கத்தை திணித்துவருகிறது.
மேலும் மத்திய அரசு நீர்ப்பாசனத்துக்கான திட்டங்களுக்கு நிதியை மிகவும் குறைத்துவிட்டது. நதிநீர் இணைப்பை செயல்படுத்த உச்சநீதி மன்றம் ஆணையிட்டப் பிறகும் செயல்படுத்த மறுக்கிறது. காவிரியில் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தவும், முல்லை பெரியாறு ஆற்றில் இருமாநில மக்களின் நலன்களிலிருந்து தீர்வுகாண மறுப்பதாலும், தமிழகம் இன்று பாலைவனமாக மாறுகிறது. இந்தியாவே வறட்சிப் பாதித்த நாடாக மாறியுள்ளது. அத்துடன் புதியகாலனி வேளாண்கொள்கைகள் விவசாயிகளை மரணக் குழியில் தள்ளுகிறது.
இந்திய அரசு பி.டி. விதைகளை (மரபணு மாற்று விதைகள்) பருத்திக்கு அடுத்து கத்தரிக்காய் உள்ளிட்ட 72 பயிர்களுக்கு விரிவுபடுத்துவது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பி.டி. பருத்தி விதையை பயன் படுத்தியதால் உற்பத்தி பெருகியுள்ளது. எனவே அனைத்துப் பயிர்களையும் பி.டி. விதைக்கு மாற்ற வேண்டும் என வாதிடுகிறது. ஆனால் பி.டி. விதையைப் பற்றி ஆய்வு நடத்திய நாடாளுமன்ற நிலைக்குழு பி.டி. விதையை தடைசெய்ய வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அண்மை ஆண்டுகளில் பருத்தி விளைச்சல் அதிகரித்ததற்குக் காரணம் இரசாயன உரங்களால் பாதிக்காத விளைநிலம், பாசன வசதி, விதை நேர்த்தி செய்யப்பட்ட ஹைபிரிடுகள்தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பி.டி. தொழில்நுட்பம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபிரிடு விதைகளில்தான் புகுதப்பட்டதே ஒழிய சாதாரண விதைகளில் அல்ல. எனவே பி.டி. விதைகளால்தான் உற்பத்தி உயர்வு என்பது மோசடியாகும். மேலும் பி.டி. விதைகள் 200 சதவீதம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அந்த விதைகளைப் பயன்படுத்தினால் இரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. 2010ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசு உரங்களுக்கான மானியத்தை வெட்டியதோடு உரங்களின் மீதான விலை நிர்ணயக் கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டது. எனவே உர விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. விதைகள், உரங்கள், டீசல் விலை உயர்வு விவசாயிகளுக்கு இடுபொருள் செலவை பன்மடங்கு உயர்த்திவிட்டன. வேளாண் பொருட்கள் மலிவான விலையில் இறக்குமதிக்கு அனுமதித்து விட்டதால் அத்துடன் போட்டிப்போட முடியாமல் இந்திய விவசாயிகள் பெருத்த நட்டமடைகின்றனர். அரசாங்கம் வழங்கும் கடன் சாதாரண நடுத்தர விவசாயிகளுக்கோ, பணக்கார விவசாயிகளுக்கோ கூட கிடைக்கவில்லை. எனவே பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களே விவசாய கடன் சலுகைகளை அனுபவிக்கின்றன. எனவே கந்துவட்டி கடன் தொல்லையால் கடந்த 15 ஆண்டுகளில் 1 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிட்டனர். தற்கொலைகள் தொடர்கிறது. விளை நிலங்கள் கொலைக்களங்களாக மாறுவதற்கு இந்திய அரசு கடைபிடிக்கும் புதியகாலனிய வேளாண் கொள்கைகளே காரணம் ஆகும்.
தொழிலாளர்கள் மீதான அரசு பயங்கரவாதம்
மத்திய, மாநில அரசுகள் அந்நிய முதலீடுகளை கவர்வது எனும் பேரில் பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு வரிச்சலுகைகள், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்றவைகளை இலவசமாகவும் மானிய விலையிலும் வாரி வழங்குகின்றன. இது போதாதென்று பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகளும் கொள்ளை லாபம் அடிப்பதற்கு உழைப்புச் சுரண்டலுக்கும் துணை போகின்றன.
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை நாளை 12 மணி நேரமாக மாற்றுவது, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த வேலைகள் மூலம் குறைந்த கூலி கொத்தடிமை முறையை உருவாக்குதல், தொழிற்சங்க உரிமை மறுப்பு, கூட்டுப்பேர உரிமை பறிப்பு, தொழிலாளர் நலத்திட்டங்கள் ஒழிப்பு, இ.எஸ்.ஐ., பி.எப் போன்ற நிதிகளையும் திருடிக் கொள்வது என்று தொழிலாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகின்றன.
இத்தகைய ஒரு சூழலில்தான் மாருதி தொழிற் சாலையில் வன்முறை வெடித்தது. மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். அதைப் பயன்படுத்திக்கொண்டு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். 500 நிரந்தரத் தொழிலாளர்கள், மாருதி சுசுகி நிறுவனம், 500 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது. அரியானா மாநில அரசோ மாருதி நிறுவனத்திலேயே ஒரு காவல் நிலையத்தை தொடங்கிவிட்டது. ஏற்கெனவே நிர்வாகம் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை கொண்டு கூலிப்படை அமைத்து தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டது. இவ்வாறு, பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக தொழிலாளர்கள் மீது அரசுபயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
கனிம வளங்கள் கொள்ளை போகின்றன
மன்மோகன் சோனியா கும்பலின் ஆட்சி அந்நிய மூலதனத்திற்கு நாட்டின் கதவுகளை எந்த அளவிற்கு திறந்துவிடுகிறதோ அந்த அளவிற்கு ஊழலில் புதிய வரலாறு படைத்து வருகிறது. அண்மையில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்குத் தாரை வார்த்ததில் ரூ. 1.86 லட்சம் கோடியும், டெல்லி விமான நிலையத்திற்கு நிலம் வழங்கியதில் ரூ. 1.63 லட்சம் கோடியும், ரிலையன்ஸ் மின் உற்பத்தி நிலையம் முறைகேடாக நிலக்கரி வழங்கியதில் ரூ. 29 ஆயிரத்து 33 கோடி என அரசாங்க கஜானாவிற்கு மொத்தம் 3.08 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மன்மோகன் கீழ் இயங்கும் நிலக்கரி சுரங்க ஊழல் மட்டுமே அலைக்கற்றை ஊழலையும் மிஞ்சிவிட்டது.
அண்மையில் நடைபெற்ற இந்த மாபெரும் ஊழல்கள் என்பது பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை மலிவான விலையில் கொள்ளையடிப்பதற்கு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இலஞ்சம் கொடுத்து சாதித்துக் கொள்கின்றன என்பதேயாகும். இதனால் ஏற்படும் இழப்பே ஊழல் என்று கூறப்படுகிறது. டாட்டா ஸ்டீல், எஸ்ஸார் பவர், ஜெ.எஸ்.டி.எல் ஹிண்டால்கோ அதானிபவர், வேதாந்தா நிறுவனங்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முறைகேடாக நிலக்கரி சுரங்கத்திற்கான உரிமம் பெற்றுள்ளன.
எனவே இத்தகைய முதலாளித்துவ ஊழல்களை ஒழிக்க வேண்டுமானால் உலகமய தனியார்மயக் கொள்கைகளை ஒழிப்பதோடு அந்நிய மூலதனத்திற்கு முடிவுகட்ட வேண்டும். தரகுமுதலாளித்துவ நிலப் பிரபுத்துவ நலன்காக்கும் இந்திய அரசை தூக்கியெறிந்து தொழிலாளி வர்க்கத் தலைமையில் விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சோவியத் வடிவிலான மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதுதான் ஒரே வழியாகும். எனினும் உடனடியாக தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்தும் ஊழல் செய்யும் அதிகாரிகளையும் அமைச்சர் களையும் மட்டுமல்லாது இலஞ்சம் வழங்கும் பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளை கைது செய்து சிறையிலடைப்பதோடு, அவர்களின் உடைமைகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் என போராடவேண்டும். அவ்வாறின்றி இலஞ்சம் கொடுப்பவர்களை விட்டுவிட்டு, இலஞ்சம் வாங்குபவர்களை மட்டும் தண்டிக்கும் சட்டத்தால் அன்னா அசாரே கும்பல் முன்வைக்கும் வலிமையான லோக்பால் போன்ற சட்டத்தால் ஊழலை ஒழிக்கவே முடியாது. மாறாக அச்சட்டம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு பணியாத அல்லது லஞ்சம் வாங்க மறுக்கின்ற அதிகாரிகளை மிரட்டுவதற்கே பயன்படும்.
ஈழத்தமிழின அழிப்புக்கு துணைபோகும் இந்தியா
இந்திய அரசின் விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்து, மன்மோகன் சோனியா கும்பல் சிங்கள இனவெறியன் இராஜபட்சேவோடு கூட்டு சேர்ந்து ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு துணைபோகிறது. போர்க்குற்றவாளி ராஜபட்சேவை சர்வதேச அரங்குகளில் காப்பாற்றுவது; வடக்கு கிழக்கை இணைத்து தமிழர் தாயகம் உருவாக்க வேண்டும் என்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறிய இராஜபட்சேவைக் கண்டிக்க மறுப்பது; ஈழப்பகுதியில் சிங்கள குடியேற்றத்தை தடுக்க மறுப்பது; சிங்கள இனவெறி அரசுக்கு அரசியல் பொருளாதார உதவிகள் அளிப்பதுடன் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது; விடுதலைப்புலிகள் மீதானத் தடையை நீட்டிப்பது போன்ற அனைத்து வகையிலும் சிங்கள இனவெறி இராணுவ சர்வாதிகார அரசுக்கு பக்கபலமாக இந்திய அரசு திகழ்கிறது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஈழத் தமிழ் அகதிகள் குற்றவாளிகளைப் போல் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முள்வேலி முகாம்களைவிட கொடிய சித்திரவதைக் கூடங்களாக அவைகள் விளங்குகின்றன. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு அரசியல் உரிமைகளை வழங்க மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவதோடு ஈழத்தமிழின அழிப்புக்கு துணைபோகும் இந்திய அரசை எதிர்த்துப் போராடுவதும்; ஈழமக்களின் தனிநாட்டு உரிமைக்கு ஆதரவளிப்பதும் தமிழ் மக்களின் உடனடிக் கடமையாகும்.
இலவசங்களைக் காட்டி மக்களை வாட்டும் “ஜெயா” ஆட்சி
தமிழகத்தை ஆளும் ஜெயா ஆட்சி, எதற்கெடுத்தாலும் கடந்தகால கருணாநிதி ஆட்சியையே குறை கூறுகிறது. ஆனால் கருணாநிதி ஆட்சிக் கடைபிடித்த கொள்கைகளையே தொடர்கிறது. அமெரிக்காவின் புதியகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதிலும், நாட்டுமக்கள் மீது சுமைகளை சுமத்துவதிலும், இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதிலும் கருணாநிதியையும் விஞ்சிவிட்டது. பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், பால் விலை உயர்வின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மக்கள் மீது சுமத்தி முதுகெலும்பை உடைத்தது. 30,000 கோடி கிரானைட் கொள்ளையிலும் ஈழத்தமிழர் பிரச்சினையிலும் கடிதம் எழுதுவதிலும், நதிநீர் பிரச்சினைக்கு கடிதம் எழுதுவதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கின்றார்கள்.
இலவசத் திட்டங்களால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் பிடிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார் ஜெயலலிதா. கல்வி, மருத்துவம், சுகாதரம் போன்ற அடிப்படைத் தேவைகளை தனியார்மயம் வணிகமயமாக்கி விட்டு ஆடு மாடு கோழிகள் இலவசத்தைக் காட்டி மக்களை ஏமாற்றுகிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கட்டாயக் கல்வி வழங்குவது, தாய்மொழிக் கல்வி, ஒரே பாடத் திட்டம், அருகமைவுப் பள்ளி என்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா அரசு ஏற்கத் தயாரில்லை. நர்சரி, ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளி என்ற கல்வி கடைகளின் கட்டணக் கொள்ளைக்கு பெற்றோர்கள் ஆளாகி பரிதவிக்கின்றனர். தனியார் லாபவெறிக்கு பிஞ்சுக் குழந்தைகள் பலியாவது கும்பகோணம் முதல் தாம்பரம் சேலையூர் வரைத் தொடர்கிறது. ஜெயலலிதா ஒரே பாடத்திட்டத்தை செயல்படுத்த மறுத்தது, தனியார் பள்ளிகளுக்கு சேவை செய்யத்தான். கருணாநிதியும் கூட சமச்சீர்க் கல்வியின் ஒரே பாடத்திட்டம் என்ற அம்சத்தை மட்டும்தான் ஏற்றார். பிற முக்கிய அம்சங்களை ஏற்கவில்லை. தி.மு.க, அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளுமே கல்வியில் தனியார்மயமாக்கி மக்களை கொள்ளையடிக்க காரணமான கட்சிகள்தான்.
அரசு மருத்துவமனைகளோ எலியும், பாம்பும் வசிக்கின்ற பாழடைந்த மண்டபங்களாக மாறிவிட்டன. மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி மற்றும் வியாபரத்தில் கடந்த பத்தாண்டுகளில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டன. போலி மருந்துகள், காலாவதியாகிப்போன மருந்துகள், சந்தையில் விற்கப்படுவதாலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் புதிய மருந்துகளை பரிசோதிக்கும் சோதனைக் களமாக இந்தியாவும் தமிழகமும் மாறி வருவதாலும் மக்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரமின்மையால் நகரங்கள் நரகமாக மாறிவிட்டன. நகரை சுத்தம் செய்வதற்குக் கூட பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சாக்கடை சுத்தம் செய்பவர்கள் தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் 36 பேர் மரணமடைந்துள்ளனர். மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் கொடுமைகள் தொடருகின்றன. சாக்கடையை சுத்தம் செய்து கொசுவை ஒழிக்கவும் இந்த ஆட்சிக்கு வக்கில்லை. சுத்தமான குடிநீர் மக்களுக்குக் கிடைக்கவில்லை. விளைவு டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட மர்மக் காய்ச்சல்கள் மக்களின் உயிரை பறிக்கின்றன. இவ்வாறு அரசாங்கம் இலவசமாக வழங்கவேண்டியவைகள் அனைத்தையும் தனியார்மயம் வணிகமயமாக்கிவிட்டு சாராயக் கடை நடத்தி அதில்தான் அரசாங்கமே நடக்கிறது. ஆடு, மாடு, கோழி இலவசங்களை நம்பி மத்திய அரசு அறிவித்துள்ள செல்போன் இலவசத்தை நம்பி ஏமாறப் போகிறோமா அல்லது விழித்துக்கொள்ள போகிறோமா என்பதுதான் இன்றைய மையமானப் பிரச்சினை.
எனவே மன்மோகன் கும்பல் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதையும் அந்நிய மூலதனத்தின் வேட்டைக்காடாக மாற்றுவதையும் எதிர்த்து; உலகமயக் கொள்கைகளைச் செயல்படுத்தி மக்களின் வயிற்றில் அடிப்பதை மூடிமறைத்து இலவசங்களை காட்டி ஏமாற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை எதிர்த்தும் தொழிலாளி வர்க்கத் தலைமையில் அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் ஒரு மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வதற்கு நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவு நாளில் சபதமேற்போம். அதற்கு கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.
« சில்லரை வணிகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்துவிடுவதை முறியடிப்போம்!
« விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் குழும விவசாயம், மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் போன்ற புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!
« பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள், தொழிலாளர் உழைப்பைச் சூறையாடுவதற்குக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
« பணிநீக்கம் செய்யப்பட்ட மாருதி தொழிலாளர்கள் அனைவரையும் திரும்ப வேலைக்கு எடு!
« ஊழலை ஒழிக்க – அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான நவடிக்கை மட்டும் போதாது!
நாட்டின் வளங்களை லஞ்சலாவண்யம் மூலமாகச் சூறையாடும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளைக் கைது செய்! உடைமைகளைப் பறிமுதல் செய்!
« ஈழத்தமிழின அழிப்பைத் தொடரும் இராஜபட்சே-மன்மோகன் கூட்டணியை முறியடிப்போம்!
« உலகமய, தனியார்மயக் கொள்கைகளைத் தொடரும் ஜெயாவே! ஆடு, மாடு இலவசத்தைக் காட்டி ஏமாற்றாதே! கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை இலவசமாக வழங்கு!
« புதிய காலனி ஆதிக்கத்தை முறியடிப்போம்!
« மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
« மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.