சோனியா மன்மோகன் கும்பலே, பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
சோனியா மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஜ.மு. கூட்டணியின் மத்திய ஆட்சி, கடந்த மே 24ஆம் தேதி இரவு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி வரலாறு காணாத அளவில் மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. அத்துடன் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளையும் உயர்த்த வேண்டும் என்று கூறி எறியும் நெருப்பில் எண்ணெய் வார்த்து வருகிறது. இக்கும்பல் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் 40 முறை பெட்ரொல் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளது.
ஏற்கனவே நிதிப்பற்றாக் குறையைக் காரணம் காட்டி மத்திய மாநில அரசுகள் புதிய வரிவிதிப்புகள், மானிய வெட்டுக்கள் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது சுமைகளை சுமத்துவதால் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இத்தகைய சூழலில் பெட்ரோல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது என்பது நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சி சாமான்ய மக்களின் ஆட்சி அல்ல. அது “சாமான்ய மக்களை சவக்குழிக்கு அனுப்பும் ஆட்சி” என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
சர்வதேச விலைக்கு இணையாக விலையை உயர்த்த வேண்டும் என்று கூறி விலையை அடிக்கடி ஏற்றி வருகிறது மன்மோகன் கும்பல். ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும்போது, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதற்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவடைந்து கொண்டே செல்வது; மத்திய, மாநில அரசுகள் தங்களின் வருவாய்க்கு பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கும் வரிக் கொள்கைகள்; அரசாங்கம் பெட்ரோலுக்கு விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை கைவிட்டு அதை பெட்ரோலிய நிறுவனங்களிடமே ஒப்படைத்தது போன்ற காரணங்களால்தான் இன்று பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தாண்டி பறக்கிறது.
பெட்ரோலிய வர்த்தகம் சர்வதேச அளவில் டாலரில் நடப்பதால் இந்தியாவிற்கு கடும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்கவேண்டியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச செலாவணி நிதியம் (IMF), உலகவங்கி (WB), சர்வதேச வர்த்தக கழகம் (ITO) போன்ற நிதிநிறுவனங்கள் மூலமும்; டாலரை சர்வதேச நாணயமாக மாற்றியதன் மூலமும் தங்களது உலக மேலாதிக்கத்தை நிறுவினர். 1970களில் ஏற்பட்ட முதலாளித்துவ நெருக்கடிக்குப் பின் டாலருக்கு இணையாக தங்கத்தை வங்கியில் வைக்கவேண்டும் என்றக் கொள்கையைக் கைவிட்டு (Gold Standard), டாலரை ஏராளமாக அச்சடித்து சர்வதேச சந்தையில் புழங்கவிட்டது. டாலர் பரிமாற்றத்தையே ஒரு பெரும் வர்த்தகமாக நடத்தி வருகின்றனர். அதே காலப் பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் போட்டி போட்டன. பனிப்போரில் ஈடுபட்டன. பெட்ரோலிய வளத்தை பங்கிட்டுக் கொண்டன.
1980களின் இறுதியில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்தியக் கிழக்கின் எண்ணெய் வளத்தின் மீது தமது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு, தமக்கு அடிபணியாத நாடுகளின் மீது இராணுவ ரீதியில் தலையிட்டு பொம்மை ஆட்சிகளை நிறுவிவருகிறது. எண்ணெய் வர்த்தகத்தை டாலரிலிருந்து, ஈரோவிற்கு மாற்றியதால்தான் அமெரிக்கா ஈராக் மீது போர்த்தொடுத்தது. சதாம் உசேனை தூக்கிலிட்டது. அங்கே தனது அடிவருடி ஆட்சியை நிறுவி ஈராக்கின் பெட்ரோல் வளத்தையும் சூறையாடி வருகிறது. அடுத்து தனக்கு அடிபணிய மறுக்கும் ஈரானை தற்போது அணு ஆயுத பூச்சாண்டிக் காட்டி அதன் மீது போர் தொடுக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கொண்டுவந்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இவ்வாறு, மத்திய கிழக்கில் எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கத்தை செலுத்தவும், டாலர் வர்த்தகத்தை கேள்வி எழுப்புவர்களை எதிர்த்தும் கடும் தாக்குதலை நடத்துகிறது. இதன் மூலம் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் ஏகபோக சிறப்பு அதிகாரத்தை பெற்றிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யும்போது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தது. குறிப்பாக ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் எரிவாயுவை இறக்குமதி செய்யக்கூடாது என்றும், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவை ஆதரிக்கவேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த அடிமை சாசனத்தில் மன்மோகன் கும்பல் கையொப்பமிட்டது. வெளியுறவுக் கொள்கையில் நாட்டின் அரைக்குறை சுதந்திரமும் பறிபோனது.
அண்மையில் இந்தியாவிற்கு வந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூட ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று எச்சரித்தார். இந்தியா அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை குறைத்து வருகிறது. ஈரான் இந்தியாவிற்கு ரூபாய் வர்த்தக அடிப்படையில் எண்ணெய் வழங்குவதற்கு தயாராக உள்ளது. ஆனால் இந்திய அரசு அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து அவ்வாறு செய்யத் தயாரில்லை. அதன் விளைவாக இந்தியா தமது வர்த்தகத்தில் ஒவ்வொரு டாலருக்கும் கூடுதலாக ரூ.6 செலுத்த வேண்டியுள்ளது. அது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை ரூ.10 அதிகமாக கூட்டுகிறது. பெட்ரோல் வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தால் வரும் சுமைதான் இது.
அடுத்து ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குக் காரணமென்ன? அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக டாலருக்கு இணையாக ரூபாயின் மதிப்பு சரிகிறது. எனவே டாலருக்கு எதிராக ரூபாய் வர்த்தகத்திற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், சுயேட்சையான வெளியுறவுக் கொள்கைகளையும் கடைபிடிக்காமல், அமெரிக்காவின் புதியகாலனிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை கைவிட்டு சுதேசிய பொருளாதாரத்தை கடைபிடிக்காமல், பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையவே குறையாது.
பெட்ரோல் விலை உயர்வுக்கான மற்றொருக் காரணம் இந்திய அரசு கடைபிடிக்கும் வரிக்கொள்கைகளாகும். டாலர் மதிப்பு உயர்வுதான் காரணம் என்றால் நமது அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளதே அது ஏன்? நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ரூ.59க்கும், இலங்கையில் ரூ.61.70க்கும், சீனாவில் ரூ.37க்கும், அமெரிக்காவில் ரூ.39.50க்கும் 1 லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. இந்தியாவிலோ ரூ. 75.50க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல் ரூ.75.50 என்றால் அதில் மத்திய, மாநில அரசுகள் வரியாக வசூலிப்பது ரூ.40 ஆகும். அதாவது 50 சதவீதம் வரியாக ஏழை, எளிய, நடுத்தர மக்களிடமிருந்து பிடுங்கிக்கொள்கின்றன.
ஆனால் மத்திய அரசு பொருளாதார நெருக்கடிகளிலிருந்து பன்னாட்டு முதலாளிகளையும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளையும் மீட்பதற்கு நட்ட ஈடு என்றும், ஊக்கத் தொகை என்றும் வரிச் சலுகைகளை ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் கோடிகளை வாரிவழங்குகிறது. மாநில அரசுகளும் போட்டிப் போட்டுக்கொண்டு சலுகைகள் கொடுக்கின்றன. இதன் மூலம் இந்திய நாட்டு கஜானாவை காலி செய்கின்றது மத்திய அரசு. இவ்வாறு கஜானாவை காலி செய்துவிட்டு, நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மக்கள்மீது சுமைகளை சுமத்துகிறது. கஜானாவை நிரப்புவதற்கு பெட்ரோலியப் பொருட்களின் மீது வரிபோடும் கொள்கைகளை கையாள்கிறது. இந்தக் கொள்கைகள்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சுகிறது.
சர்வதேச சந்தையின் விலைக்கு இணையாக விலையை உயர்த்தாததால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 2010-11ல் ரூ.72,000 கோடி இழப்பை சந்திப்பதாக மன்மோகன் கும்பல் நாடகமாடுகிறது. இதே ஆண்டு பெட்ரோலியப் பொருட்களின் மீது சுங்கவரி, எக்சைஸ் வரிகள் மூலம் மத்திய அரசு ரூ.92,000 கோடியும், மாநில அரசுகள் ரூ.72,000 கோடியும் வரியாக வசூல் செய்துள்ளன. இவ்வாறு 2011ஆம் ஆண்டுவரையிலான கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு 4,10,842 கோடியும், மாநில அரசுகள் ரூ.2,63,000 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.6.73,842 கோடியை வரி எனும் பேரில் சுருட்டியுள்ளன. ஆனால் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களுக்கு ஆண்டிற்கு ரூ.45,000 கோடி மானியம் வழங்குவதாகவும், இந்த மானியத்தை குறைத்து பெட்ரோல் டீசல் விலைகளை இன்னமும் உயர்த்த வேண்டும் என்று கூறுகிறது. அரசாங்கம் மானியம் வழங்குவதை விடவும் அதிகமாகவே மக்களிடமிருந்து வரியாக வசூலித்து விடுகிறது. ஆனாலும் அதை மூடிமறைத்து நிதி பற்றாக்குறையைக் காட்டி மானியத்தை குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2, டீசல் ரூ. 7, சமையல் எரிவாயு 1 சிலிண்டருக்கு ரூ.322 என உயர்த்த வேண்டும் என்று கூறுகிறது. மத்திய மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்களை ஒரு பண்டமாக கருதவில்லை. வரிகள் மூலம் கஜானாவை நிரப்புகின்ற ஒரு காமதேனுவாகவே கருதுகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமான வரிக்கொள்கைகளை ஒழித்துக்கட்டாமல் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் எக்காலத்திலும் குறையப் போவதில்லை.
பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசு எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைப்பது மூலம் அந்நிறுவனங்களின் நட்டத்தை சரிகட்ட முடியும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அரசாங்கம் நட்டம் என்று கூறுவது மிகப்பெறும் மோசடியாகும் மாறாக எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வதால் உள்நாட்டில் அரசு நிறுவனங்களும் தனியார் எண்ணெய் நிறுவனங்களும் கொழுத்த லாபம் அடைகின்றன என்பதே உண்மை. அரசுநிறுவனங்களான ஓ.என்.ஜி.சி (ONGC) ரூ.18,924 கோடி லாபம் அடைந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (IOC) ரூ. 7,445 கோடியும், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (BPCL) ரூ 1547 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (HPCL) ரூ.1,539 கோடியும் 2010-11ல் இலாபம் ஈட்டியுள்ளன.
அரசுத்துறை நிறுவனங்களைவிட தனியார்துறை நிறுவனங்கள் மிகவும் அதிக லாபத்தை ஈட்டியுள்ளன. 90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு எண்ணெய் உற்பத்தியில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. இந்நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசு சர்வதேச விலையின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்கிறது. எனவே இத்துறையில் ஈடுபட்டுள்ள தனியார் முதலாளிகள் கொழுத்த லாபம் அடைகின்றனர்.
உதாரணத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இயங்கிவரும் பிரிட்டனைச் சார்ந்த “கெய்ர்ன்” குழுமத்திற்கு 2010-11ன் முதல் காலாண்டில் கிடைத்த லாபம் ரூ.245 கோடிதான். ஆனால் 2011-12ன் அதே காலப் பகுதியில் அதன் நிகரலாபமோ ரூ. 2457 கோடியாகும். அந்நிறுவனத்தின் லாபம் 10 மடங்கு அதாவது 1000 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3.5 (GDP) சதவீதமாகும். இந்தியாவின் மொத்த எண்ணெய் தேவையில் சுமார் 25 சதவீதம் உள்நாட்டிலிருந்தே கிடைக்கிறது. எனவே இந்திய நாட்டின் சொத்தான இந்தக் கனிம வளங்களை இந்திய அரசே ஏற்று நடத்துமானால், எண்ணெய் விலையை அரசே தீர்மானிக்குமானால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை சுமார் 20 சதவீதம் குறைக்க முடியும். எண்ணெய் எரிவாயுத் துறையில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை ஒழிப்பது ஒன்றுதான் விலைகுறைப்பிற்கான வழியாகும்.
பெட்ரோல் விலை உயர்வுக்கெதிரான மக்களின் கோபத்தை தரகுமுதலாளித்துவ ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஐ.மு. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. ஆனால் இக்கட்சிகள் ஆட்சியிலிருந்து விலகவோ அல்லது மக்கள்விரோத, தேசவிரோத காங்கிரஸ் ஆட்சியை தூக்கியெறியவோ தயாரில்லை. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட ஆளும்வர்க்கக் கட்சிகள் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தையோ, டாலரில்தான் வர்த்தகம் நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களையோ எதிர்க்கத் தயாரில்லை. மத்திய அரசு ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக செயல்படுத்திவரும் வரிக்கொள்கைகளை எதிர்ப்பதில்லை. எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானிக்கலாம் என்ற அரசின் முடிவையும் எதிர்ப்பதில்லை. அது கூட பா.ஜ.க ஆட்சியின் போதுதான் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு முதலாளித்துவக் கட்சிகள் இந்தக் கொள்ளைகளை ஆதரித்துக் கொண்டே பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று போராடுவது ஒரு மோசடியாகும்.
எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற இந்திய அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்யவும்; டாலர் வர்த்தகத்திற்கு மாற்றாக ரூபாய் அடிப்படையிலோ அல்லது வேறு மாற்றுக்காகவோ இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடுவும், மக்கள் விரோத வரிக்கொள்கைகளை கைவிடக் கோரியும்; பெட்ரோலியத் துறையில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை திரும்பப் பெற்று அரசே ஏற்று நடத்தவேண்டும் என்றும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராடவேண்டும். அதற்குக் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரண்டு போராட முன்வருமாறு அறைகூவி அழைக்கிறோம்
சோனியா, மன்மோகன் கும்பலே, பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப்பெறு!
« எண்ணெய் விலையைக் குறைக்கவும் சுதந்திர வர்த்தகத்தை உருவாக்கவும் அமெரிக்காவின் புதிய காலனி ஆதிக்கத்தையும் டாலர் ஆதிக்கத்தையும் முறியடிப்போம்!
இந்திய அரசே!
« அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்துச் செய்!
« ஈரான் உள்ளிட்ட எண்ணெய்வள நாடுகளுடன் சுதந்திர ஒப்பந்தம் செய்!
« டாலருக்கு மாற்றாக ரூபாய், யூரோ நாணய அடிப்படையில் வர்த்தகம் செய்!
« பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை நிர்ணய அதிகாரத்தை தனியாரிடமிருந்து பறித்தெடு! அரசே விலை நிர்ணயம் செய்!
« மத்திய, மாநில அரசுகளே! பெட்ரோலியப் பொருட்கள் மீது விலை என்ற பேரால் 40 சதவீதம் வரிவிதிக்கும் கொள்கையைக் கைவிடு!
« எண்ணெய், எரிவாயு வளத்தின் மீதான தனியார் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டு! அனைத்தையும் அரசுடைமையாக்கு!
« உற்பத்தி வீழ்ச்சிக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கும் காரணமான உலகமயக் கொள்கைகளைக் கைவிடு!
« எண்ணெய் ஆதிக்கத்தில் அமெரிக்க ஏகபோகத்தை எதிர்க்காமல், தரகுமுதலாளித்துவ வரிக்கொள்கையை எதிர்க்காமல் விலையைக் குறை என ஆளும்வர்க்கக் கட்சிகள் போடும் கூப்பாடு மக்களை ஏமாற்றவே!
« எண்ணெய் விலையைக் குறைக்க – அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தையும் இந்திய அரசின் சரணாகதிப் பாதையையும் எதிர்த்துப் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.