Thursday, June 28, 2012

நூல் மதிப்புரை: அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும்

அணு ஆற்றல் வேண்டுமா வேண்டாமா? என்ற கேள்விக்கான பதிலை இந்த புத்தகத்தினை வாசிப்பதின் மூலம் நீங்கள் அறியலாம். இன்றைய கூடன்குளம் அணு உற்பத்தி நிலையம் மக்கள் மனதில் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. அணு ஆற்றல் அழிவின் சக்தி என்றும் அதை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் அணு சக்தி என்பது தவிர்க்க முடியாத சக்தி என்று கூறுவதே இந்த நூலின் சாரம்.

அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும்
ஆசிரியர்: வில்லியம் பால்

சமரன் வெளியீட்டகம்
விலை: 30/-

தொடர்புக்கு: 9941611655
samaranpublisher@gmail.com,
samaranvelietagam@yahoo.com

பதிப்புரை

தோழர் வில்லியம் பால் பிரிட்டனில் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் சேர்ந்து பின்னர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து செயல்பட்டவர். 1920களில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மார்க்சிய சித்தாந்தத்தை பரப்புவதில் மிகச் சிறந்த ஆசிரியராக திகழ்ந்துள்ளார். பல்வேறு கம்யூனிச பத்திரிக்கைகளில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப்பின் வாடிக்கன் (போப்) தலைமையிலான கிறித்துவ திருச்சபையும், அமெரிக்காவின் இராணுவ விஞ்ஞானிகளும், நிதி மூலதனக் கும்பல்களும் அணுசக்திக்கு எதிராக பீதியூட்டி அணுசக்தியை ஏகபோகமாக்கிக்கொள்ள முயன்றனர். அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான், அது மனித சமுதாயத்திற்கு பேரழிவையே உண்டுபண்ணும், அணுசக்தியை ஆக்கசக்தியாக பயன்படுத்தவே முடியாது என்று பீதியூட்டி அணுசக்திக்கு எதிரான இயக்கத்தை தொடங்கி வைத்தனர். அணுசக்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதர்களுக்குக் கிடையாது என்று வாதிட்டனர். 1946ல் தோழர் பால் மார்க்சிய ஆசான்களின் வழிநின்று, இந்தப் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடுத்தார். அணுசக்தியை ஆக்க சக்தியாக மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த முடியும்; அணு ஆற்றலை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று உறுதியாக வாதிட்டார். வரலாற்றுப் பூர்வமாக இயற்கை ஆற்றல்களை நெருப்பு, நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அணுசக்திவரை எவ்வாறு மனிதன் அதை கட்டுக்குள் கொண்டுவந்தான் என்பதையும், அதனால் சமூகப் பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் எடுத்துரைத்துள்ளார். அணுசக்தி வரும் காலத்தில் எப்படி வளர்ச்சியடையும், அது எப்படி நவீன பொது உடமை சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக எடுத்துரைத்துள்ளார். நெருப்பு, நிலக்கரி, அணுசக்திக்கு எதிராக மேற்சொன்ன பிற்போக்கு சக்திகள் எப்படி அச்சத்தையும், பீதியையும் ஊட்டி சமூக வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டன என்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர்.

தோழர் வில்லியம் பால், மார்க்சிய மூலவர்களில் ஒருவரான எங்கெல்ஸ் இயற்கை சக்திகளை மனிதன் எவ்வாறு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறான் என்பதையும்; ஏகபோக முதலாளித்துவத்தின் காலகட்டத்தில் மூலதனம் உச்சபட்ச வளர்ச்சியடைந்து எப்படி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விலங்காக மாறிவிட்டது என்பதையும்; இனி தனியுடைமை அடிப்படையிலான, இலாப நோக்கத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ பொருளுற்பத்தியை தொடர முடியாது என்பதையும், உற்பத்தி சாதனங்களை அரசுடைமை ஆக்குவதன் மூலமே சமூக வளர்ச்சியடைய முடியும் என்பதையும் தனது கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ள அடிப்படையிலேயே தமது நிலைபாட்டை முன்வைத்துள்ளார். எங்கெல்ஸ் கூறுவதாவது “செயல்வன்மை வாய்ந்த சமூக சக்திகள் நாம் அவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலும் இருக்கும்வரை இயற்கை சக்திகளைப் போலவே கண்மூடித்தனமாகவும் பலாத்காரமாகவும் நாசகரமாகவும் செயல்படுகின்றன. ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொண்டது அவற்றின் செயலையும் திசைவழியையும் பலன்களையும் மனத்தால் பற்றிக்கொண்டதும், பிறகு அவற்றை நம் சித்தாந்தத்திற்கு கீழ்படியச் செய்து அவற்றைக் கொண்டு நமது நோக்கங்களை ஈடேற்றிக்கொள்வது முற்றிலும் நம்மையே பொறுத்ததாகும். முக்கியமாக இது பேராற்றல் கொண்ட இன்றைய உற்பத்தி சக்திகளுக்கு மிகவும் பொருந்துவதாகும்...

ஆனால் அவற்றின் தன்மை புரிந்துகொள்ளப்பட்டதும், ஒன்றுபட்டு வேலை செய்யும் உற்பத்தியாளர்களுடைய கரங்களில் ஆட்டிப்படைக்கும் பூதங்களாக ஆதிக்கம் புரியாமல் மனமுவந்து பணிபுரியும் பணியாளர்களாக அவற்றை மாற்றிவிடலாம். இந்த வேறுபாடு புயலின் போது இடியிலுள்ள மின்விசையின் அழிவு சக்திக்கும் தந்தியிலும் வோல்ட்டா மின்வில்லிலும் பணிந்து செயல்படும் மின் விசைக்கும் உள்ளது போன்றதாகும். நாசம் விளைவிக்கும் பெரும் தீயிற்கும் மனிதனுக்கு சேவைபுரியும் நெருப்புக்குமுள்ள வித்தியாசமாகும்

மேலும் ஏகபோக முதலாளித்துவம் பற்றிக் குறிப்பிடுவது “டிரஸ்ட்டுகளின் சுதந்திரமானப் போட்டி அதற்கு நேர் முரணானதாகிறது ஏகபோகமாகிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் உறுதியான திட்டம் ஏதும் இல்லாத பொருளுற்பத்தி படையெடுத்துவரும் சோசலிச சமுதாயத்தின் உறுதிவாய்ந்த திட்டவழியிலான பொருளுற்பத்தியிடம் சரணடைகிறது. இதுவரை இன்னமும் இது முதலாளிகளுடைய ஆதாயத்துக்காகவும் அனுகூலத்துக்காகவும் ஆனதே என்பது மெய்தான். ஆனால் இந்தச் சுரண்டல் இப்படி அப்பட்டமாக இருப்பதால் இது தகர்க்கப்பட்டே ஆக வேண்டும். இலாப வெறியர்களது ஒரு சிறு கும்பல் இப்படிப் பட்டவர்த்தனமாக சமூகத்தைச் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்து டிரஸ்டுகள் நடத்தும் பொருளுற்பத்தியை எந்த தேசமும் சகித்துக் கொண்டிருக்காது.

எப்படியும், டிரஸ்டுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளாகிய அரசு கும்பல் பொருளுற்பத்தியின் நெறியாண்மையை ஏற்கவேண்டிவரும். அரசின் உடைமையாக மாற்றப்பட வேண்டிய இந்த அவசியம் தகவல் தொடர்புக்கும் போக்குவரத்துக்குமாகிய மாபெரும் ஏற்பாடுகளான அஞ்சல் நிலையம், தந்தி, ரயில்வே ஆகியவற்றில் எல்லாவற்றிகும் மேலாக உணரப்படுகிறது மேற்கண்ட மார்க்சிய அடிப்படைகளில் ஊன்றி நின்று தோழர் பால் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

அன்றையக் காலக்கட்டத்தைவிட இன்று முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் அராஜகம் பல ஆயிரம் மடங்கு தலைவிரித்தாடுகையில்; மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு பல ஆயிரம் மடங்கு பெருகியுள்ள இன்றைய சூழலில்; மனித குலத்தின் ஆற்றல் தேவைகள் பன்மடங்கு அதிகரித்து வருகின்ற ஒரு சூழலில் இன்றும் கூட அணுசக்திக்கு எதிரான பிற்போக்கு சக்திகளின் அழிவுவாதத்தை முறியடிப்பதற்கும்; அணு ஆற்றலை விடுவித்து 100ல் 99 பேராக உள்ள பரந்துபட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் இந்தக் வெளியீடு பயனுள்ள பங்களிப்பை செய்யும். 1946லேயே இப்படி ஒரு போராட்டத்தை தொடங்கிவைத்த தோழர் வில்லியம் பால் போற்றுதலுக்குரியவரே. இதை நாடு தழுவிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன் உள்ள முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.

Wednesday, June 20, 2012

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!

சோனியா மன்மோகன் கும்பலே, பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சோனியா மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஜ.மு. கூட்டணியின் மத்திய ஆட்சி, கடந்த மே 24ஆம் தேதி இரவு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி வரலாறு காணாத அளவில் மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. அத்துடன் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளையும் உயர்த்த வேண்டும் என்று கூறி எறியும் நெருப்பில் எண்ணெய் வார்த்து வருகிறது. இக்கும்பல் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் 40 முறை பெட்ரொல் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளது.

Saturday, June 9, 2012

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப்பெறு!

சோனியா, மன்மோகன் கும்பலே!

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப்பெறு!

« எண்ணெய் விலையைக் குறைக்கவும் சுதந்திர வர்த்தகத்தை உருவாக்கவும் அமெரிக்காவின் புதிய காலனி ஆதிக்கத்தையும் டாலர் ஆதிக்கத்தையும் முறியடிப்போம்!

இந்திய அரசே!

« அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்துச் செய்!

« ஈரான் உள்ளிட்ட எண்ணெய்வள நாடுகளுடன் சுதந்திர ஒப்பந்தம் செய்!

« டாலருக்கு மாற்றாக ரூபாய், யூரோ நாணய அடிப்படையில் வர்த்தகம் செய்!

« பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை நிர்ணய அதிகாரத்தை தனியாரிடமிருந்து பறித்தெடு! அரசே விலை நிர்ணயம் செய்!

« மத்திய, மாநில அரசுகளே! பெட்ரோலியப் பொருட்கள் மீது விலை என்ற பேரால் 40 சதவீதம் வரிவிதிக்கும் கொள்கையைக் கைவிடு!

« எண்ணெய், எரிவாயு வளத்தின் மீதான தனியார் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டு! அனைத்தையும் அரசுடைமையாக்கு!

« உற்பத்தி வீழ்ச்சிக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கும் காரணமான உலகமயக் கொள்கைகளைக் கைவிடு!

« எண்ணெய் ஆதிக்கத்தில் அமெரிக்க ஏகபோகத்தை எதிர்க்காமல், தரகுமுதலாளித்துவ வரிக்கொள்கையை எதிர்க்காமல் விலையைக் குறை என ஆளும்வர்க்கக் கட்சிகள் போடும் கூப்பாடு மக்களை ஏமாற்றவே!

« எண்ணெய் விலையைக் குறைக்க அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தையும் இந்திய அரசின் சரணாகதிப் பாதையையும் எதிர்த்துப் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு