செப்டம்பர் 12 - தோழர் பாலன் நினைவுநாள், தியாகிகள் தினம்!
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!
செப்டம்பர் 12 தர்மபுரி நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலி மோதலில் படுகொலைசெய்யப்பட்ட நாள். அன்றைய தினத்தை, 1947 போலி சுதந்திரத்தையும், அரைநிலப்பிரபுத்துவம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடி உயிர் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான நக்சல்பாரி இயக்கத்தோழர்களின் நினைவு நாளாக கடைபிடித்து வருகிறோம். இவ்வாண்டு தியாகிகள் நினைவு நாளில் இராஜீவ் கொலையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யப் போராடுவோம் என தமிழ் மக்களை அறைகூவி அழைக்கிறோம்.
சோனியா, மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சியின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவர் இம்மூவரின் கருணை மனுக்களை நிராகரித்துவிட்டார். பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு என நாளும் குறிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்தது. காஞ்சியில் செங்கொடி என்ற இளம் பெண் தீயிட்டுக் கொண்டு மாண்டு போனார். தமிழகம் கொந்தளித்தது. இவர்களின் தூக்குத்தண்டனைக்குத் தடைக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று 8 வார காலம் தூக்குத் தண்டனையை தள்ளி வைத்துள்ளது. ஆனால் சோனியா, மன்மோகன் கும்பலோ பேரறிவாளன் உள்ளிட்ட இம்மூவரின் கருணை மனுக்களை கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது அவசர அவசரமாகவும் சட்ட விரோதமாகவும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்தக் கும்பல் துடிப்பது ஏன்? கருணை மனுவிற்கு இரண்டு ஆண்டிற்குள் குடியரசுத் தலைவர் பதிலளிக்காவிட்டால் மரணத்தண்டனை தானாகவே ஆயுள் தண்டனையாக மாறிவிடும். மேலும் ராஜீவ் கொலையில் உள்ள சர்வதேச சதிகளையும், சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி போன்றவர்களின் மீதானக் குற்றச்சாட்டு மர்மங்களையும் தீர்க்காமலே, விசாரணை முடியாமலே சட்ட விரோதமாக இம்மூவரையும் அவசர கதியில் தூக்கிலிடுவதற்கு சோனியா மன்மோகன் கும்பல் கொலைவெறியோடு துடிப்பது ஏன்?
ஈழத்தமிழின அழிப்புப் போரின் தொடர்ச்சியே இம்மூவரின் தூக்கு:
சிங்கள இனவெறிப் பாசிச ராஜபட்சே கும்பல் ஈழத்திற்கு எதிரான நான்காம் கட்டப்போர் எனும் பேரில் ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது. இப்போரில் ஈழத்தழிர்கள் 1 லட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் உதவியுடன் ராஜபட்சே கும்பல் இப்போரை நடத்தியது. ராஜபட்சே கும்பல் இப்போரில் கடும் போர்க் குற்றங்களை புரிந்தது. இந்திய அரசு இப்போரை ராஜபட்சேக் கும்பலுடன் கூட்டாகவே நடத்தியது.
போருக்குப் பின்பும் இராஜபட்சே கும்பல் ஈழப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகளை மறுத்து இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது. எனவே உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் ராஜபட்சேக் கும்பலின் போர்க்குற்றங்களை எதிர்த்தும், இன அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும் போராடினர். ஐ.நா பொதுச் செயலாளர் நிபுணர்குழுவை அமைத்தார். இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மையே என்று இக்குழுவும் கூறியது. சேனல் 4 போர்க்குற்றக் காட்சிகளை ஒளிபரப்பியது. அது உலகத்தில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது. சர்வதேச அரங்குகளில் இராபட்சேக் கும்பல் மீது கண்டனம் குவிந்தது. தமிழகத்திலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் இராஜபட்சேக் கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கவும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்திய அரசு இராஜபட்சேக் கும்பலை சர்வதேச அரங்குகளில் பாதுகாத்துவருகிறது. தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு இலங்கை அரசுடன் கூடிக்குலாவுகிறது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவாகியது. எனவே இத்தகைய சூழலில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசைத்திருப்பவும், ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் இம்மூவரின் தூக்குத் தண்டனையை அவசரமாக செயல்படுத்த துடிக்கிறது. இந்தத் தூக்கு ஈழத்தமிழின அழிப்புப்போரின் தொடர்ச்சியேயாகும்.
இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கைக்கு கொடுத்த விலைதான் ராஜீவ் படுகொலை
அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ இந்திய அரசு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு சேவை செய்வதுடன் இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவும் திகழ்கிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை சட்டவிரோதமாக்கியுள்ளது. காஷ்மீர், அசாம், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் மக்களின் தேசிய இனப் போராட்டங்களை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்தியாவை அடிமைப்படுத்தும் இந்திய அரசு இந்திய ஆளும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்களிலிருந்து தென் ஆசியாவில் தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முயற்சிக்கிறது. தமது விரிவாதிக்க நலன்களிலிருந்து அண்டை நாடுகளின் மீது தமது மேலாதிக்கத்தைத் திணிக்கிறது. இலங்கையில் நடக்கும் இனப்பூசலை பயன்படுத்திக்கொண்டு அதன் உள்விவகாரங்களில் தலையிட்டது. இந்திய அரசு ஆரம்பத்திலிருந்தே ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து வருகிறது. இந்திராகாந்தியின் காலத்தில் இலங்கை அரசை பணிய வைப்பதற்காக ஈழப்போராளி அமைப்புகளுக்கு ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது. இலங்கை அரசுடன் மோதவிட்டது. ராஜீவ் காலத்தில் இலங்கை அரசு பணிந்தவுடன் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மீது தமது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு ஈழவிடுதலைப் போருக்குத் துரோகம் செய்தது. ஈழப் போராளிகள் அமைப்புகளை பணியவைத்தது. புலிகள் அமைப்பு மட்டும் பணிய மறுத்தது.
1987ல் ராஜீவ் மேற்கண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என்று கூறி ‘அமைதிப்படை’ எனும் பேரில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை அனுப்பிவைத்தார். அந்தப்படை ஈழத்தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகளையும் வேட்டையாடியது. பல ஆயிரம் பேர் இப்போரில் இந்தியப் படையால் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அந்தப்படை ஈழமக்களை சூறையாடியது. இந்திய ‘அமைதிப்படையால்’ பாதிக்கப்பட்ட ஒரு பெண், இந்த அநீதிப் படையின் தலைவன் என்ற முறையில் ராஜீவ் காந்தியை தற்கொலைப் படையாய்மாறி கொன்றாள். எனவே ராஜீவ் படுகொலை கிரிமினல் நடவடிக்கை அல்ல. அது ஒரு அரசியல் படுகொலையே. இதற்குத் தீர்வு இம்மூவரையும் தூக்கில் ஏற்றுவதல்ல. மாறாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும், ஈழமக்களுக்கு இந்திய அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதுமே தீர்வாகும். இந்திராகாந்தியை கொன்றவனை தூக்கிலிட்டதால், ராஜீவ் காந்தியை காக்க முடியவில்லை. எனவேதான் இம்மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.
போலி மோதலும் மரணதண்டனையே!
இந்திய அரசு மரணதண்டனையை அரிதிலும் அரிதாகவே பயன்படுத்துவதாகக் கூறுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத்தண்டனை அத்தகையதுதான் என்று கூறுகிறது. ஆனால் இந்தியா முழுதும் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கில் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுபவர்களையும், மாவோயிஸ்டுகள் போன்ற புரட்சியாளர்களையும் போலீசுடன் மோதல் எனும் பேரில் சுட்டுத்தள்ளுகிறது. வழக்குகளின்றி, விசாரணை இன்றி பல்லாயிரக்கணக்கான பேர் இவ்வாறு இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நாட்டில் நடக்கும் அனைத்து மோதல் படுகொலைகளும் சட்டவிரோதமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமாகும்.
காஷ்மீரிலும், வடகிழக்கு மாகாணங்களிலும் நடப்பில் உள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டங்கள் இராணுவத்தினருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குகின்றன. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்யலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம். நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கமுடியாது. பேரறிவாளன், முருகன், சாந்தன் போன்றவர்களின் தூக்குதண்டனையை இரத்து செய்யச் சொல்வது எந்த அளவிற்கு நியாயமானதோ, அதே அளவிற்கு போலி மோதல் மூலம் அன்றாடம் இராணுவமும், காவல்துறையினரும் செய்யும் கொலைகளை தடுத்து நிறுத்தப் போராடுவதும் சிறப்பு இராணுவச் சட்டங்களை ரத்துச் செய்யப் போராடுவதும் அவசியமாகும்.
பறிபோகும் மாநில அதிகாரங்கள்
ஜெயலலிதா அவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்வதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்றும், குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதேப் பிரச்சினை தொடர்பாக கருணை மனுவை மாநில ஆளுனர் பரிசீலிக்க வேண்டுமென மாநில அரசு கோர முடியாது என 1991ஆம் ஆண்டு மத்திய அரசு 161 சட்டப்பிரிவிற்கு தெளிவுரை எழுதியுள்ளது என்று கூறியுள்ளார். எனினும் சட்டமன்றத் தீர்மானம் மூலம் குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்றக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் மத்திய அரசு இலங்கை அரசுடன் கூடிக் குலாவுவதை கண்டிக்கவில்லை. ஜெயலலிதா அரசாங்கம் இலங்கைப் பிரச்சனையிலும் மூவரின் தூக்கு தண்டனைக் குறித்த பிரச்சனையிலும் கொண்டுவந்துள்ள சட்டமன்றத் தீர்மானங்கள் வரவேற்கத் தகுந்ததே. எனினும் இவையெல்லாம் தீர்மானங்களாகவே இருந்துவிடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க போன்ற இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமையை ஏற்காதக் கட்சிகள், மாநில உரிமை, சுயாட்சி பேசும் கட்சிகளே. தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை மதிக்காமல் மத்திய அரசு இலங்கை அரசோடு கூடிக் குலாவுவதை ஜெயலலிதா கண்டிக்கவில்லை. மாநில சுயாட்சி பேசிய கருணாநிதியோ தமது குடும்ப ஆட்சி பற்றியே கவலைப்படுகிறார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் தூக்குதண்டனையை இரத்து செய்வது பற்றியும் மத்திய அரசிற்கும் கடிதம் எழுதுவதோடு சரி. ஆனால் கனிமொழியை விடுவிப்பதற்கு, சொத்து அபகரிப்பு வழக்குகளிலிருந்து கட்சியைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே துடிக்கிறார். எனவே இவ்விருக் கட்சிகளும் தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கூட காப்பாற்றுமா என்று தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
ஈழத்தமிழர் பிரச்சினையாக இருப்பினும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினையாயினும் நதிநீர் பிரச்சினையாக இருந்தாலும், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு விவகாரத்திலும் தமிழக அரசின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்ற சோனியா குமபலின் மத்திய அரசு மறுக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கிறது. தமிழினத்தின் மீது பகைமையை கக்குகிறது. இந்தியாவில் ஏற்படும் இத்தகைய தேசிய இனச்சிக்கல்களுக்கு அனைத்து தேசிய இனங்களும் ஒன்று சேர்ந்து இந்திய அரசை ஜனநாயகப்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்று கருதுகிறோம். அதுவே இத்தகைய போராட்டங்களுக்கு பலமளிக்கும் என்றும் கருதுகிறோம். எனினும் மத்திய அரசு கடைபிடித்து வரும் தமிழின விரோத நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களை தங்கள் பிரச்சினைகளை தனித்தே தீர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது என்ற எச்சரிக்கையை மத்திய அரசிற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவேதான் இவ்வாண்டு தியாகிகள் நினைவுநாளில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குதண்டனையை இரத்துச் செய்யவும், தமிழினத்துரோகி சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சியை தூக்கியெறியவும் தமிழ்மக்கள் அனைவரும் ஓரணியில் திரள அறைகூவி அழைக்கிறோம்.
மூவரையும் தூக்கிலிடத் துடிக்கும் தமிழினத்துரோகி சோனியா, மன்மோகன் கும்பலின் ஆட்சியைத் தூக்கியெறிவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.