அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!
14வது தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலை வரும் ஏப்ரல் 13ல் சந்திக்க இருக்கிறோம். இத்தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய ஒரு கூட்டணியும்; அ.தி.மு.க தலைமையில் தே.மு.தி.க, ‘இடது’சாரி கட்சிகள் அடங்கிய மற்றொரு கூட்டணியும்; புதியதாக முளைத்துள்ள சாதிவாதக் கட்சிகள் இக்கூட்டணிகளில் சேர்ந்தும் போட்டியிடுகின்றன. பா.ஜ.க, இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன.
இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்னால், பாட்டாளிவர்க்கமும், பிற ஜனநாயக சக்திகளும் இத்தேர்தலில் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னால் இன்று நாடு முழுதும் நிலவுகின்ற சூழ்நிலைகளைப் பற்றி ஒரு ஆழமான பரிசீலனை செய்வது மிகவும் அவசியமாகும். நடக்க இருப்பது தமிழக சட்டமன்றத் தேர்தலேயானாலும், நாடு முழுவதற்குமான ஆய்வு அவசியம். ஏனெனில், சோனியா-மன்மோகன் கும்பல் கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் செயல்படுத்திவரும் அதேக் கொள்கைகளையே, கருணாநிதி தலைமையிலான தமிழ்மாநில ஆட்சியும் செயல்படுத்திவந்தது. மேலும் மத்திய அரசு கொள்கைகள்தான் மாநில அரசுகளின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன.
2004ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த சோனியா-மன்மோகன்-கருணா கும்பல், அதற்கு முன் ஆட்சியிலிருந்த பா.ஜ.க தலைமையிலான தே.ஜ. கூட்டணி கடைப்பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனியாக மாற்றும் கொள்கைகள், உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதியகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையே செயல்படுத்தியது. இக்கும்பல் வகுத்துக்கொண்ட குறைந்தபட்சத் திட்டத்தையெல்லாம் எப்போதும் செயல்படுத்தவில்லை. மேற்கண்ட தேசத்துரோகக் கொள்கைகளை செயல்படுத்தியதால் இன்று நாடு அனைத்து துறைகளிலும் ஒரு நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இராணுவ, அணுசக்தி மற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, நாடு அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றப்படுவதுடன், அமெரிக்காவிற்கு இந்தியாவை ஒரு எடுபிடியாகவும் மாற்றப்படுகிறது.
- இந்திய ஆளும் தரகுமுதலாளித்துவ நலன்களிலிருந்து தென் ஆசியாவின் துணை மேலாதிக்க நலன்களுக்காக, குறிப்பாக இலங்கையின் மீது இந்தியாவின் மேலாதிக்கத்திற்காக ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத பௌத்த மதவாத ராசபட்சேக் கும்பலின் இன அழிப்பு போருக்கு அனைத்து விதத்திலும் உதவியதோடு அப்போரைக் கூட்டாக நடத்தியது. இன அழிப்புப் போருக்கு தொடர்ந்து மன்மோகன் கும்பல் ஆதரவளிப்பது. கருணாநிதி ஆட்சி இவை அனைத்திற்கும் துணைபோவது.
- உள்நாட்டில் தேசிய இனங்களின் மீதான தாக்குதல் தொடரும்போதே, மத்திய அரசு உலகமயக் கொள்கைகளை செயல்படுத்த விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைப்பதும்; இந்தி, ஆங்கில ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவிலுள்ள பல தேசிய மொழிகள் அழியும் ஆபத்தை உருவாக்குவது.
- உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதால் நாடு ஓட்டாண்டியாக்கப்பட்டு வருவதுடன், அனைத்துத் துறைகளிலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் பெருகிவருவதுடன், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. விவசாயிகளின் தற்கொலைகளும் பட்டினிச்சாவுகளும் பெருகிவரும் போக்கு அதிகரித்து வருகிறது.
- ஆளும் வர்க்கங்களின் மீது வரிபோட மறுத்து நாட்டின் கஜானாவை காலி செய்துவிட்டு, கஜானாவை நிரப்புவதற்கு மக்கள் நலத் திட்டங்களுக்கான குடிநீர், கல்வி, மருத்துவம், சுகாதாரம் திட்டங்களுக்கு கட்டணங்களை விதிப்பதன் மூலமும், அவற்றைத் தனியார்மயமாக்கி வணிகமயமாக்குவதன் மூலமும் நிதித் திரட்டுகிறது. கருணாநிதி கும்பலோ மக்கள் நலத்திட்டங்களை பறிப்பதை மூடிமறைகவே, அவைகளையே இலவசமாகக் கொடுப்பதாக இலவச நாடகமாடுகிறது. அதையும் டாஸ்மாக் மூலம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் நிதியைக் கொண்டே வழங்கிவிட்டு, அந்த இலவசங்களிலும் இக்குடும்பம் பல ஆயிரம் கோடி கொள்ளையடித்து வருகிறது. மாறாக கருணாநிதி குடும்பம் மட்டுமல்ல சோனியா-மன்மோகன் கும்பல், ஆளும் வர்க்கங்களுக்கு ஆண்டிற்கு 5 லட்சம் கோடி ரூபாய் வழங்குகின்ற வரிச்சலுகைகள்தான் உண்மையான இலவசங்களாகும். வள்ளல் வேடம்போட்டு இலவசத் திட்டங்களால் நாட்டுமக்களுக்கு இழைக்கும் துரோகங்களை சோனியா-மன்மோகன்-கருணா கும்பல் மூடிமறைத்துவிடலாம் என்று கனவுகாண்கிறது.
இந்தியாவிலும், தமிழ்கத்திலும் மேற்கண்ட நிலைமைகளே இன்றைய பொதுப்போக்காக உள்ளது. இத்தகைய ஒரு சூழலில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் அனுகுமுறையும், பாட்டாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய செயல்தந்திரமும் என்ன என்பதைப் போர்ப்போம்.
இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதிலும்; உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும்; இந்திய ஆளும் வர்க்கங்களின் விரிவாதிக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும், உலகமயக் கொள்கைகளை செயல்படுத்துவதால் வரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதிலும் காங்கிரஸ், பா.ஜ.க. இவ்விரு கட்சிகளுக்கிடையில் அடிப்படையில் வேறுபாடு இல்லை. மேலும் மதவாதப் பாசிசத்தைக் கடைப்பிடிப்பதில் தோற்றத்தில் வேறுபாடுகள் இருந்தபோதும், காங்கிரஸ் இந்துத்துவ பாசிச சக்திகளோடு சமரசமாகவே போகிறது. பா.ஜ.க மூர்க்கத்தனமான இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்றால்; காங்கிரஸ் தேசிய ஒருமைப்பாடு எனும் பாசிசக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது. இரண்டு கட்சிகளுமே இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே. இவ்விரண்டு கட்சிகளுமே இந்திய, தமிழ் மக்களின் முதன்மையான எதிரிகளேயாகும்.
இருப்பினும் இன்றைய தமிழகச் சூழலில் பா.ஜ.க. ஒரு பெரும் சக்தியாக இல்லை. காங்கிரஸ் கட்சியோ தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் போனது. தற்போது தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க மூர்க்கத்தனமாக முயற்சி செய்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்புள்ளது. தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கும் போதே தேர்தலுக்குப்பின் புதியக் கூட்டணிகளை அமைப்பதற்கான பேரங்கள் திரைமறைவில் துவங்கிவிட்டன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி 2ஜி அலைக்கற்றை ஊழலைப் பயன்படுத்திக்கொண்டு கருணாநிதியின் மனைவி தயாளுவையும், மகள் கனிமொழியையும் கைது செய்வோம் என்று மிரட்டியே 63 இடங்களைப் பெற்றுள்ளதோடு, ஆட்சியில் பங்கு என்றும் பேசிவருகிறது. அதற்கு ஏற்பவே தொகுதிகளை வாங்கியுள்ளது. தி.மு.க-வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவதற்குத் துடிக்கிறது. ஒரு வேளை தி.மு.க-விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அ.தி.மு.க-வோடு சேர்ந்து ஆட்சி அமைக்கத் தயாராகவே உள்ளது. அ.தி.மு.கவின் ஜெயலலிதாவும் காங்கிரசோடு கூட்டுசேரத் தயாராகவே இருப்பார்.
காங்கிரஸ் கட்சி தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் எத்தகையதொரு நிலைமை உருவாகும்?
நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் போக்கும், தமிழகம் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக் காடாக மாறுவதும் இன்னும் தீவிரமாகும். ஈழத் தமிழினம் சிங்கள இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மீண்டும் எழுச்சி பெறுவதை ஒடுக்குவதற்கு தமிழகம் களமாக மாறும். தேசிய இன, மொழி உரிமைகளுக்காகப் போராடுபவர்கள், ஈழவிடுதலை ஆதரவாளர்கள் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதன் மூலம் மத்திய ஆட்சியைப் பலப்படுத்தி புதியகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்வது இந்திய அளவிலும் மேலும் பலப்படும். எனவேதான் காங்கிரஸ் கட்சியை பிரதான எதிரியாக கருதுகிறோம். காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டுவோம் என்றும் கூறுகிறோம்.
காங்கிரஸ் கட்சி அல்லாத தி.மு.க தலைமையிலோ அல்லது அ.தி.மு.க தலைமையிலோ ஆட்சி அமைந்தாலும், அல்லது வேறொரு கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் புதியகாலனியாதிக்கதிற்கே சேவை செய்யும். தமிழகம் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாறுவதை தடுப்பதற்கோ, ஈழத் தமிழினத்தின் மீதான இந்திய அரசின் அடக்குமுறைகளைத் தடுக்கவோ, இந்தி ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்து தமிழை ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக மாற்றவோ, சாதித்தீண்டாமையை ஒழித்து சமதர்ம சமுதாயம் படைக்கவோ பயன்படப்போவதில்லை. எனவே இக்கட்சிகளை ஆதரிக்கமுடியாது.
பா.ம.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள் மற்றும் புதிதாக உருவாகியுள்ள சாதிவாதக் கட்சிகள் அனைத்தும் சாதி ஒழிப்பையோ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையோ திட்டமாகக் கொண்டக் கட்சிகள் அல்ல. இக்கட்சிகள் அனைத்தும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பது இல்லை. தி.மு.க அணியிலோ, அ.தி.மு.க அணியிலோ அதிக இடங்களைப் பெறுவது, தமிழக ஆட்சியிடம் பதவிகளையும் சலுகைகளையும் பெறுவதுதான் அவைகளின் இலட்சியங்களாக உள்ளன. எனவே இத்தகைய கட்சிகளுடனும் சேரமுடியாது.
இடது, வலது போலி கம்யூனிஸ்ட்டுகளோ மத்திய ஆட்சி செயல்படுத்தும் உலகமய, தாராளமயக் கொள்கைகளை அவர்கள் ஆளும் மாநிலங்களில் அப்படியே செயல்படுத்துகின்றனர். அவர்களின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும் கூட சமரசத்தன்மை வாய்ந்ததுதான். இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளை ஆதரிப்பதோடு, ஈழப் பிரச்சனைக்கு இலங்கை அரசமைப்புக்குள்ளேயே தீர்வு காணவேண்டும் என்று கூறி ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்றனர். இவ்வாறு சிங்களப் பேரினவாதத்திற்கு துணை போகின்றனர். தேசிய ஒருமைப்பாடு எனும் பேரில் தேசிய சுயநிர்ணய உரிமையை ஏற்க மறுக்கின்றனர். எனவே இக்கட்சிகள் ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு மாற்றான கட்சிகள் அல்ல. இவர்களோடு பாட்டாளி வர்க்க இயக்கம் கூட்டணி அமைக்க முடியாது.
காங்கிரசை முறியடித்து, காங்கிரஸ் அல்லாத புதிதாக ஒரு மாநில ஆட்சி அமைந்தாலும் புதியகாலனிய ஆதிக்கத்தை எதிர்க்கவும் உலகமயக் கொள்கைகளை செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தவும் நிலச் சீர்திருத்தத்தை நிறைவேற்றவும் தேசிய இன சுயநிர்ணய உரிமையை வெல்லவும் தாய்மொழியை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கவும் செயல்படும் அரசாக அமையப் போவதில்லை. எனவே இத்தகைய ஆட்சியை அமைக்கப் போட்டியிடும் கூட்டணிகள் ஆதரிக்கத் தகுந்ததல்ல. எனவே தேர்தலைப் புறக்கணிப்பது தவிர்க்க முடியாததாக மாறுகிறது.
நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளில், சட்டமன்றங்களில் பெரும்பான்மைப் பெறுவதன் மூலமாக மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று கூறி ஆளும் வர்க்கக் கட்சிகளும், திருத்தல்வாதிகளும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களாக செயல்படுகின்றனர். பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது அது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவிற்கு சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும் நடைமுறையிலும் தயாரிப்பதே நம்முடைய இன்றைய கடமையாகும். எனவே இக்கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலைப் புறக்கணிப்போம். பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்.
தமிழினவிரோத, புதியகாலனிய தாசர் சோனியா காங்கிரஸ் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!
ஈழவிடுதலைப் போரை நசுக்கிய சோனியா கும்பலுக்கு தமிழகத்தில் இடமில்லை!
தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும் தமிழை ஆட்சிமொழி பயிற்று மொழியாக்கவும் போராடுவோம்!
மாநில ஆட்சி அதிகாரங்களை ஏகாதிபத்தியங்களுக்குத் தாரைவார்ப்பதை அனுமதியோம்!
வேளாண் நிலங்களை பன்னாட்டுக் குழுமங்களிடம் ஒப்படைப்பதை எதிர்ப்போம்!
நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை தனியார்மயமாக்கி மக்கள் உரிமைகளைப் பறிப்பதை எதிர்ப்போம்!
வாக்குவங்கிக்கான சாதிவாத தேர்தல் கூட்டணிகளை எதிர்ப்போம்!
சோனியா, மன்மோகன், கருணா ஊழல் கும்பலுக்கு மாற்று ஜெயா, அத்வானி கும்பல் அல்ல!
தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.