Tuesday, May 1, 2018

மே நாள் ஊர்வல முழக்கங்கள்


மே நாள் ஊர்வல முழக்கங்கள்

மேதினி போற்றும்…       மேநாள்!
பாட்டாளி வர்க்கப்….     போர்நாள்!!

ஒடுக்கப்பட்ட…               மக்களின்
உரிமைகளைக்…              காத்திடும்
கடமைகளைக் …              காட்டிடும்
மே தினத்தைப்…              போற்றுவோம்!!

Monday, April 30, 2018

2018-மே நாளில் சூளுரைப்போம்!


மே நாளில் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

உலகப் பாட்டாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் மக்களும், ஏகாதிபத்திய நிதி மூலதனத் தாக்குதலி லிருந்து உடனடி நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடுவதோடு சோசலிசம், ஜனநாயகம், விடுதலைக்காக போராட சூளுரைக்கும் நாளே மே நாள்!! தற்போது ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடிகளை உலக மக்கள் மீது சுமத்த பாசிசத்தை திணிப்பது; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போர் தீவிரமடையும் சூழலில் இம்மேநாளை எதிர்கொண்டுள்ளோம்!

தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடி

2008ல் அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியிலிருந்து உலகம் இன்னமும் மீளவில்லை. 2020ல் அமெரிக்காவும், உலகமும் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியில் வீழும் என்றும், அது 2008 ஐ விட கடுமையானதாக இருக்கும் என்றும் சர்வதேச செலாவணி நிதிய செயலாளர் எச்சரித்துள்ளார்.

Tuesday, March 13, 2018

கார்ப்பரேட் நலனுக்காக காவிரியில் தமிழகத்திற் உரிய நீரின் அளவைக் குறைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டிப்போம்!


கார்ப்பரேட் நலனுக்காக காவிரியில் தமிழகத்திற் உரிய நீரின் அளவைக் குறைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தனது தீர்ப்பில் தமிழகத்திற்கான 14.75 டி.எம்.சி தண்ணீரைப் பறித்து பெங்களூர் குடிநீர் என்று கூறி கர்நாடகத்திற்குக் கொடுத்து தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. கர்நாடக அரசாங்கமோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து காவிரி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று இனவெறியோடு செயல்படுகிறது. உச்சநீதிமன்றமோ, ஹெல்சிங்கி கோட்பாட்டின் அடிப்படையில் காவிரிபாயும் மாநிலங்களுக்கு சமபங்கீடு, மேலாண்மை வாரியம் என்ற தீர்ப்பை அளித்துவிட்டு, கேம்பியோன் விதிகள் மற்றும் பெர்லின் விதிகளைக் காட்டி காவிரி நான்கு மாநிலங்களின் சொத்து என்பதற்குப் பதிலாக தேசிய சொத்து என்று அறிவித்து பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கு காவிரி நீரை தாரை வார்த்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்தை மட்டுமல்ல இந்தியா முழுவதையும் தண்ணீர் பிரச்சினையில் ஒரு கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

தமிழகத்தை வஞ்சிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!

காவிரி நடுவர்மன்றம் ஹெல்சிங்கி கோட்பாட்டின் அடிப்படையில் நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவில்லை என்றும், காவிரி பாயும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் 20 டி.எம்.சி நீரையும் கணக்கில் கொண்டு பெங்களூரு குடிதண்ணீரின் தேவைக்காக என்று கூறி தமிழகத்தின் 14.75 டி.எம்.சி நீரை எடுத்து கர்நாடகாவுக்கு கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

Saturday, February 3, 2018

தமிழக அரசே! பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாகத் திரும்பப் பெறு!


தமிழக அரசே! பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!!

தமிழக அரசே! பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

கிரிமினல் மாஃபியா ஜெயாவின் சிஷ்ய கோடிகள் எடப்பாடி-பன்னீர் ஆட்சி பேருந்துக் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தி ஏழை எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாத சம்பளத்தில் 25 சதவீதத்தை பேருந்துக் கட்டணத்திற்கு செலவழிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகளால் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள மக்கள் மீது பேரிடியாக இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு இறங்கியுள்ளது.

தற்போதைய இந்தக் கட்டண உயர்வுமட்டுமல்ல, எதிர்காலத்தில் ஜி.எஸ்.டி. வரியை வசூலிக்கவும், டீசல் விலை உயர்வு அல்லது பிற காரணங்களால் பேருந்துக் கட்டணங்களை ஆண்டுதோறும் அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் அரசாங்கத்தைக் கேட்காமல் அதிகாரிகளே உயர்த்திக் கொள்ளலாம் என்ற துரோகத்தையும் துவக்கி வைத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பொம்மைகளாக்கி கட்டணங்களை உயர்த்தும் அதிகாரத்தை அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைத்துவிட்டது. நித்தம்நித்தம் கட்டண உயர்வு என்ற அதிர்ச்சியில் மக்களைத் தள்ளியுள்ளது. இந்த அநியாய பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்கள் மற்றும் மக்களின் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளன.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!!

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!!

தமிழக அரசே! உயர்சாதி வெறியர்களின் மீது நடவடிக்கை எடு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

தருமபுரியில் பா.ம.க மற்றும் வன்னிய சாதி அமைப்புகள் மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தை நடத்தத் திட்டமிட்டு வருகின்றன. நல்லம்பள்ளி வன்னியர் சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியங்கா, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ராஜ்குமாரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். வீட்டில் எதிர்ப்புக் கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாரை சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

சாதிக் கலவரத்தைத் தூண்டும் வன்னிய சாதி அமைப்புகள்

உடனடியாக வன்னிய சாதியைச் சேர்ந்த 300 பேர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நல்லம்பள்ளி சந்தையின்போது சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டினர். பிரியங்காவை ராஜ்குமார் கடத்திவிட்டதாகவும், உடனடியாக பிரியங்காவை ஒப்படைக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் பிரியங்காவை ஒப்படைக்காவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தனர். அன்று இரவே சாதி வெறியர்கள் 6-பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்தனர். அதில் மூன்று பேர் ராஜ்குமார் வீட்டையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியதுடன் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திருப்பித் தாக்கவே ஓடிவிட்டனர்.

Tuesday, October 3, 2017

புதியகாலனிய ஜி.எஸ்.டிவரியை முறியடிப்போம்!!



புதியகாலனிய ஜி.எஸ்.டிவரியை முறியடிப்போம்!!
http://senthalamsamaran.blogspot.co.id/2017/10/blog-post.html



Thursday, August 31, 2017

மோடிஅரசே…! பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறு!!

மோடிஅரசே…! பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவில் “பொருட்கள் மற்றும் சேவை வரிச்சட்டத்தை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற பேரில் பொருளாதாரம் மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்ற, சட்டமன்றங்களிடம் இருந்து பறித்து, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. 1947, ஆகஸ்ட்-15 நள்ளிரவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து அரசியலதிகாரம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜூன் 30 நள்ளிரவில் மோடி நடத்திய நாடாளுமன்றக் கூட்டம் பொருளாதார மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாட்டின் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது.

Saturday, July 29, 2017

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் அவர்களுக்கு வீரவணக்கம்!


நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் அவர்களுக்கு வீரவணக்கம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

நக்சல்பாரி புரட்சி இயக்கத்தின் முன்னணித் தோழரும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் செயல்வீரருமான தோழர் பச்சியப்பன் அவர்கள் 2017 ஜீன் 9ஆம் நாள் மாரடைப்பால் காலமானார். நாட்டின் விடுதலைக்காகவும் மக்களின் ஜனநாயகத்திற்காகவும் கர்ஜனை புரிந்துவந்த கம்பீரக் குரல் ஓய்ந்துவிட்டது. ஓய்வறியாத சூரியன் மறைந்துவிட்டது. இந்தியப் புரட்சி இயக்கம் ஒரு முன்னணிப் போராளியை இழந்துவிட்டது. 

“எல்லோரும் இறக்கவேண்டியவர்கள்தான். ஆனால் இறப்பு என்பது அதன் முக்கியத்துவத்தில் வேறுபட்டது. மக்களின் நலன்களுக்காக மரணமடைவது இமயமலையைவிட கனமானது. ஆனால் பாசிஸ்ட்டுகளுக்காக உழைத்து, சுரண்டுவோருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்காகவும் இறப்பது இறகைவிட லேசானதாகும்.” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க, மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர் தோழர் பச்சியப்பன். ஆம், தோழர் பச்சியப்பன் அவர்களின் மரணம் இமயமலையைவிட கனமானது!.

நக்சல்பாரி புரட்சி இயக்கத்தின் வழிகாட்டுதலில், தருமபுரி மண்ணில் களமாடிய தோழர் பாலன் அவர்களின் புரட்சிகர அரசியல் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் பச்சியப்பன். புரட்சிகர இயக்கத்தை ஒழித்துக்கட்ட எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு நரவேட்டை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், பாலக்கோடு-சீரியம்பட்டியில் தோழர் பாலன் உரையாற்றவிருந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் தோழர் பச்சியப்பன். தோழர் பாலன் காவல்துறைக் கயவாளிகளால் அடித்துக் கொல்லப்பட்டு தியாகியாகிறார். அடக்குமுறை தாண்டவமாகிறது. தோழர் பச்சியப்பன் அவர்களும் கடும் அடக்குமுறைக்கு உள்ளாகிறார். அரசின் அடக்குமுறை என்ற உலைக்களத்தில் பச்சியப்பன் என்கிற உருக்குவாள் உறுதியேற்றப்படுகிறது. தோழர் பாலனின் ரத்தத்தில் நனைந்த கொடியை கையிலேந்தி, அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சிங்கமாக அன்று தொடங்கிய தோழர் பச்சியப்பன் அவர்களின் புரட்சிப் பணி அவர் தன் இறுதிமூச்சை நிறுத்திக்கொண்ட நேரம்வரை தொடர்ந்தது.

பள்ளி சென்று முறையாக கல்வி கற்க வாய்பில்லாத, சிறுவிவசாயக் குடும்பத்து இளைஞனாக இருந்தபோது இயக்கத்தில் ஈடுபட்ட தோழர் பச்சியப்பன், தன் கேள்வி ஞானத்தை விசாலப்படுத்திக் கொண்டு, தோழர்கள் முன்வைக்கும் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை கூர்ந்து கவனித்து உள்வாங்கி, அப்படி உள்வாங்கிய அரசியலின் அடிப்படைகளில் ஊன்றிநின்று, அந்தப் புரட்சிகர அரசியலை தனது மக்கள் மொழியில் எங்கேயும் எப்போதும் இடையறாது பிரச்சாரம் செய்தவர் தோழர் பச்சியப்பன். 

தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் உறுதி, தலைமை மீது அசைக்கமுடியாத விசுவாசம், முன்முயற்சியுடன் கூடிய செயல்பாடு என அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் முன்நின்று போராடியவர் தோழர் பச்சியப்பன். பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள், தமிழை ஆட்சிமொழி ஆக்குவதற்கான போராட்டங்கள், தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள், சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் என எண்ணிலடங்கா போராட்டங்களில் முதன்மைப் பங்காற்றியவர். அடக்குமுறைகளுக்கு அஞ்சாது உறுதியாக நின்று போராடியவர். கருணாநிதியின் கபடநாடகமான ‘செம்மொழி மாநாட்டை’ அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தி, கைதாகி காவல் நிலையத்தில்.கடும் சித்தரவதைகளுக்கு ஆளானபோதும் கொண்ட கொள்கையில்உறுதியாக நின்று மக்களுக்காக தொடர்ந்து தெண்டாற்றியவர் தோழர் பச்சியப்பன்.

“கம்யூனிஸ்ட் என்பவர் விசால உள்ளம் படைத்தவராக இருக்கவேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்கவேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர்போல் கருதவேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்குக் கீழ்படுத்தவேண்டும். எங்கும் எப்போதும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றிற்கும் எதிராக சளையாத போராட்டம் நடத்தவேண்டும்.” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க தவறான கருத்துக்களுக்கு எதிராக - கலைப்புவாத நிலைகளுக்கு எதிராக சமரசமின்றி, சலியாது போராடியவர் தோழர் பச்சியப்பன்.

ம.ஜ.இ.க.வின் புரட்சிகர அரசியல் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி, இயக்கம் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க ஆயத்தம் ஆன நிலையில் 2004ஆம் ஆண்டுகளில் கோடாரி காம்புகளாக சில புல்லுருவிகள், மார்க்சியத்தோடு பெரியாரிய, அம்பேத்காரிய கருத்துகளை கலப்பது என்கிற கலைப்புவாத நோக்கத்தில் “அகிலம் புத்தகக்கடை” வடிவில் சித்தாந்தக் கலைப்புவாதம் மா-லெ புரட்சி இயக்கத்தில் நுழைய முயன்றபோது, கலைப்புவாதத்திற்கு எதிரான அணிகளின் கலகத்தில்-அமைப்பை காப்பாற்றும் அரிய போராட்டத்தில் முன்நின்றவர் தோழர் பச்சியப்பன்.

“பாதகம் செய்பவரைக் கண்டால்
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதிமிதித்துவிடு பாப்பா \ -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.” 

என்கிற பாரதியின் சீற்ற வரிகளுக்குச் செயல்வடிவம் தந்தவர் சீரியம்பட்டித் தோழர் பச்சியப்பன். கலைப்புவாதம், பிழைப்புவாதம், பாலியல் பண்பாட்டுச் சீரழிவு போன்ற புற்று நோய்களுக்கு எதிராக அயராது போராடி அமைப்பைக் காப்பாற்றியவர் தோழர் பச்சியப்பன்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்தும், அதுகுறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல், எப்படியும் சாகப்போகிறோம், இருக்கும் குறுகிய காலத்திற்குள் அதிகபட்சமான அரசியல் பணிகளை ஆற்றவேண்டுமென்ற திடசித்தத்தோடு, முன்னிலும் வேகமாய் புரட்சிப் பணியாற்றியவர் தோழர் பச்சியப்பன்.அவரது அந்த செம்மாந்த உழைப்பின் வெற்றி-2017 மே நாளில் பாலக்கோட்டில் நடைபெற்ற மே நாள் பேரணி, பொதுக்கூட்டம்!. ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு எதிராக, இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிராக ம.ஜ.இ.க. முன்வைத்த அரசியலை பாலக்கோடு நகரத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களையும் சிறுபான்மை இஸ்லாமியப் பெருமக்களையும் பெருவாரியாகத் திரட்டியதில் தோழர் பச்சியப்பன் அவர்களின் பங்கு மகத்தானது.

மார்க்சியம் - லெனினிய அரசியலை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதில் மட்டுமல்ல, தனது சொந்த வாழ்விலும் கம்யூனிச ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தவர். தன் குடும்பம் முழுவதையும் புரட்சிகர அரசியலில் ஈடுபடவைத்தவர். சாதி தீண்டாமையையும், மத சடங்குகளையும் புறந்தள்ளியவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற கோட்பாட்டில் உறுதியாக நின்று போராடியவர்.

நார்மன் பெத்யுன் குறித்த தோழர் மாவோவின் மதிப்பீடு, தோழர் பச்சியப்பனுக்கும் பொருந்தும். “தோழர் பெத்யுன் அவர்களின் உணர்வு, தன்னைப்பற்றிய சிந்தனை ஒன்றும் இன்றி, பிறருக்கான அவருடைய பரிபூரணத் தியாகம், தமது வேலையில் அவர் கொண்டிருந்த எல்லையற்ற பொறுப்புணர்சியிலும், தோழர்களின் மீதும் மக்களின் மீதும் அவர் வைத்திருந்த எல்லையற்ற இதய ஆர்வத்திலும் காணப்பட்டது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எள் அளவும் சுயநலமற்ற உணர்வை நாம் எல்லோரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உணர்வைக்கொண்டு ஒவ்வொருவரும் மக்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழமுடியும். ஒருவருடைய திறமை பெரிதாக அல்லது சிறிதாக இருக்கலாம். ஆனால் அந்த உணர்வு ஒருவருக்கு இருந்தால், அவர் உன்னத சிந்தையும் தூய்மையும் உடையவராக, ஆத்மபலமுடைய, கொச்சை நப்பாசைகளைக் கடந்த ஒரு மனிதனாக-மக்களுக்குப் பயனுள்ள ஒரு மனிதனாக இருப்பர்.”

தோழர் பச்சியப்பன் அவர்களிடமிருந்து பாடம் கற்போம்!. மக்களுக்காக வாழ்ந்து மடிந்த அவரது தியாகத்தைப் போற்றுவோம். இறுதிமூச்சு இருந்தவரை அவர் ஊன்றிநின்ற மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தை வளர்த்தெடுப்போம்! புதியகாலனி ஆதிக்கத்தையும் இந்துத்துவப் பாசிசத்தையும் வீழ்த்திட, மக்கள் ஜனநாயக அரசமைத்திட தோழர் பச்சியப்பன் பெயரால் சூளுரைப்போம்.

தோழர் பச்சியப்பன் நினைவு நீடூழி வாழ்க!

 நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம்
07-08-2017 திங்கள் - மாலை 5:00 மணி
பாலக்கோடு பேருந்துநிலையம் - தருமபுரி.
தலைமை : தோழர் மாயக்கண்ணன், தருமபுரி மாவட்ட அமைப்பாளர்.
வரவேற்புரை : தோழர் சின்னயன், ம.ஜ.இ.க பாலக்கோடு
படத்திறப்பு : தோழர் பழனி - ம.ஜ.இ.க தருமபுரி.
            உரையாற்றுவோர்
தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சென்னை
தோழர் பெரியண்ணன் ம.ஜ.இ.க தருமபுரி
தோழர் சோமு சேலம் மாவட்ட அமைப்பாளர்
தோழர் குணாளன் வேலூர் மாவட்ட அமைப்பாளர்
தோழர் சண்முகம் கடலூர் மாவட்ட அமைப்பாளர்
தோழர் இரணதீபன் தஞ்சை மாவட்ட அமைப்பாளர்.
தோழர் வெள்ளைச்சாமி  திண்டுக்கல் - ம.ஜ.இ.க
தோழர் பூபதி ம.ஜ.இ.க கோவை
தோழர் ஞானம் மாநில அமைப்பாளர்
நன்றியுரை
தோழர் தேன்பழனி ம.ஜ.இ.க பாலக்கோடு.
 (மக்கள் கலைமன்ற கலைநிகழ்ச்சி நடைபெறும்)
அனைவரும் வருக!  அஞ்சலி நல்குக!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு