Sunday, October 23, 2016

தமிழகம் - காவிரியின் வடிகால் அல்ல! காவிரியில் தமிழகத்தின் சம உரிமைக்காகப் போராடுவோம்!


தமிழகம் - காவிரியின் வடிகால் அல்ல!
காவிரியில் தமிழகத்தின் சம உரிமைக்காகப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

காவிரிப் பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் 30.9.2016 அன்று, மத்திய அரசு 4 நாட்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் 10 நாளைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்குமுறையாற்று ஆணையத்தையும் அமைக்க வேண்டும்,  என்ற உத்தரவை கர்நாடகா ஏற்க மறுத்ததுடன் தண்ணீரை திறக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.  

கர்நாடகம், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்த் தாவாச் சட்டம் என அனைத்தையும் தொடர்ந்து மீறி வருகிறது. காவிரியில் நிரம்பி வழிந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் என்கிறது. வறட்சிக் காலங்களில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுத்து அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக, தமிழகத்தை காவிரியின் வடிகாலாக மாற்றிட முயற்சிக்கிறது.

காவிரிப் பிரச்சினையில் மோடி அரசின் துரோகம்

காவிரிப் பிரச்சினையில், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் மார்பில் குத்துகிறது என்றால், மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியோ தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது. உச்ச நீதி மன்றத்தில் 30.9.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஒப்புக்கொண்டதோடு, மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால், 3.10.2016-ல் நடந்த வழக்கு விசாரணையில், “நடுவர்மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருக்கும் நிலையில், இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு செல்லாது, காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றச் சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும், இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறி பல்ட்டி அடித்து கர்நாடகத்திற்கு சாதகமான நிலை எடுத்து தமிழகத்தை வஞ்சித்தது. 40-ஆண்டுகால தமிழகத்தின் சட்டப் போராட்டத்தை நிர்மூலமாக்கியது. இதன் மூலம் மோடி ஆட்சி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. மாறாக, மாநிலங்களின் உரிமைகளையும் பறித்து, அனைத்து அதிகாரத்தையும் மத்தியில் குவித்து எதேச்சதிகார ஆட்சியின் மூலம் புதியகாலனியத்திற்கு சேவை செய்கிறது. இத்தகைய எதேச்சதிகாரப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.

தீராத காவிரிப் பிரச்சினை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்திற்கு ஆறுதல் அளிக்கின்ற தீர்ப்புதான். அந்தத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராடுவதும் அவசியம்தான். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மட்டுமே காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. காரணம் 2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் வறட்சிக் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வது எப்படி என்ற வரையறையை முன்வைக்கவில்லை, அதை நீதிமன்றத்தால் வரையறுக்கவும் முடியாது. எனவேதான் இரண்டாண்டுக்கு ஒரு முறை வறட்சி ஏற்படும் எல்லாக் காலங்களிலும் போராட்டத்திற்கான நிலைமைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

இவ்வாறு காவிரிப் பிரச்சினையில் நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாததற்கு காரணம் என்ன?

காவிரிப் பிரச்சினையில், காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் கர்நாடகத்தில் அக்கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால்தான், போட்டிப் போட்டுக் கொண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த மறுக்கின்றன என்பதில் பாதி உண்மைதான் உள்ளது. காவிரிப் பிரச்சினைத் தீராமல் தொடர்வதற்கு ஜனநாயக விரோத அரசியல் சட்டங்கள் மற்றும் ஆளும் வர்க்கக் கட்சிகள் கடைப்பிடிக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன.

நதிநீர்ச் சிக்கலை தீர்க்க வக்கற்ற அரசியல் சட்டம்

காவிரி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு சரியான, நியாயமான முறையில் தீர்வு காண்பது என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு தீர்வு காண்பதற்கு எளிமையான சட்டவிதிகள் எதுவும் இல்லை. 

         வரலாற்று ரீதியாகவே இந்தியாவில் ஆற்று நீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன. இந்தியாவில் ஓடும் 18 பெரிய ஆறுகளில் 17 ஆறுகள் மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆறுகள் ஆகும். இதில் எதில் ஒன்றிலும் இதுநாள் வரையில் சிக்கல்கள் தீர்க்கப்படவே இல்லை. இதற்கு ஜனநாயகமற்ற வரலாற்று ரீதியான காரணங்களுடன் அரசியல் சுயநலன்களும் காரணமாகும். 

ஆற்று நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண 1979ஆம் ஆண்டு உருவான நர்மதை ஆற்று நடுவர் மன்றம், 1980ஆம் ஆண்டு உருவான கோதாவரி நடுவர் மன்றம், 2010ஆம் ஆண்டு உருவான கிருஷ்ணா நடுவர் மன்றம் போன்ற நடுவர் மன்றங்கள் வெகு காலமாக இயங்கவே இல்லை. நர்மதை நடுவர் மன்றம் 37 ஆண்டுகள் கடந்தபின்பும் சர்தார் சரோவர் அணைக்கு தீர்வு காணவே இல்லை. குஜராத்தின் வறண்ட கட்ச் பகுதிக்கு நீர் வழங்கும் பிரச்சினையில் குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கிடையில் அடுத்தக் கட்ட மோதல் தயாராகி வருகிறது. கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்சினை தீராமல் இரண்டாவது நடுவர்மன்றம் அமைக்கும் வேலை நடந்து வருகிறது.

நதி நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 262வது பிரிவோ, அதனடிப்படையில் 1956ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட  நடுவர் மன்றம் அமைப்பதற்கான சட்டத் திருத்தங்களோ, விவசாயிகள் உள்ளிட்டு அனைவருக்கும் நீர் உட்பட அனைத்துக்கும் உத்திரவாதம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 19(a) பிரிவு உட்பட அனைத்துச் சட்டங்களும் சில நீர்ப் பகிர்வு, நீர்மின் திட்டம் அமைக்க பயன்பட்டிருந்தாலும் மொத்தத்தில் நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வுகாண முடியாததாகவே உள்ளன. விவசாயிகளின் பிரச்சினைகள் மட்டுமல்ல குடிநீர்ப் பிரச்சினையக் கூட, இருக்கும் சட்டங்களால் தீர்க்க முடியாது. எனவே நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க அரசியல் நிர்ணயச் சட்டமே மாற்றி எழுதப்பட வேண்டும். இவ்வாறு ஜனநாயகமற்ற அரசியல் சட்டங்களும், ஆளும் வர்க்கக் கட்சிகளின் அரசியல் சுயநலன்களும் காவிரிப் பிரச்சினைத் தீராததற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

காவிரிப் பிரச்சினைக்கு சரியானத் தீர்வு

காவிரிப் பிரச்சினையில் மேல் மடையைச் (Upper Riparian Rights) சார்ந்த கர்நாடகம், அதன் பகுதிக்குட்பட்ட ஆற்றுநீர் அதன் பயன்பாடு மீது முழு இறையாண்மையை உள்ளடக்கிய சட்ட அதிகாரம் கோருகின்ற ஹார்மன் கோட்பாட்டை முன்வைக்கிறது. 

அதற்கு நேர் மாறாக கீழ் மடையைச் (Lower Riparian Rights) சார்ந்த தமிழகம், ஆற்றுப் படுகை உழவர்களின் அனுபவ பாத்தியதை உரிமையைக் (Prescreptive Rights) கோருகிறது. அதாவது 1924 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி நீர் விடவேண்டும் என்று கோருகிறது.

இவ்விரண்டு கோட்பாடுகளும் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்படாத, அநீதியான கோட்பாடுகளாகும். நாம் நிராகரிக்க வேண்டிய கோட்பாடுகளாகும். மாறாக, நிபுணர்களால் முன்வைக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமபங்கீட்டுக் கோட்பாடான ஹெல்சிங்கி கோட்பாடே (The Doctrine of Equitable Apportionment) நதி நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுகின்ற நியாயமான சரியான கோட்பாடாகும். இதன்படி, குறிப்பிட்ட பரப்பு அல்லது அமைப்பிற்குட்பட்ட ஆற்று நீரின் பயன்கள் அவ்வமைப்பு அல்லது பரப்பின் மீது சட்ட அதிகாரம் செலுத்தும் நாடுகள் தங்களுக்கிடையில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இத்தகைய சமபங்கீட்டுக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் காவிரி பிரச்சினைக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிர்ச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும். இதனை உடனடியாக அமல்படுத்த நாம் போராட வேண்டும்.

ஆனால், காவிரிப் பிரச்சினை தீராததற்கு, ஆளும் வர்க்கக் கட்சிகள் கடைப்பிடிக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றொரு முக்கியக் காரணமாகும். மத்திய மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் புதிய தாராளக் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்க்கையில் கடும் துன்பங்களைக் கொண்டு வந்துள்ளது. அதிலிருந்து அவர்களைத் திசைத்திருப்ப நதி நீர்ப் பிரச்சினைகளை ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்துகின்றன. 

விவசாயிகளின் அவலங்களும் ஆளும் வர்க்கங்களின் சதியும்

தண்ணீர்ப் பிரச்சினைதான் விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் என்று இரண்டு மாநில ஆளும் வர்க்கக் கட்சிகளும் வாதிடுகின்றன.

        ஒருபுறம் தமிழகத்தில், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு “இறுதியானது”; அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கூட கேள்வி எழுப்ப முடியாது; இதுவே சட்டத்தின் நிலை என்று வாதிடப்படுகிறது. மறுபுறம் கர்நாடகத்தில், வறட்சி நிலவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீர்ப்புதான் அவர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று அவர்களிடம் உறக்கக் கூறப்படுகிறது. 

விவசாயிகளைப் பொறுத்தவரை, தங்களது வாழ்நிலை வீழ்ச்சியடைந்து வருகின்ற இன்றைய எதார்த்த சூழலில் இத்தீர்ப்புகள் என்பது மிகமிக சாதாரணமாகும். எந்த ஒரு நாடாளுமன்றவாதக் கட்சியும் விவசாயிகளின் துன்பத்திற்கான உண்மையான காரணம் எங்கே உள்ளது எனக் கூறத் தயாரில்லை. இன்று நாடு முழுவதும் விவசாயிகள் நம்பிக்கை இழந்து தவித்து வருகின்றனர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் விவசாய நெருக்கடிகளின் பன்முகத் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் விவசாயிகளின் துன்பங்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. வேளாண் துறை நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் நன்கறிந்ததுதான். அவை பின் வருமாறு:

           புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்திய காலத்தின்போது விவசாய உற்பத்தி பாதியாக வீழ்ச்சியடைந்துவிட்டது; நபர் ரீதியான உணவுதானிய உற்பத்தி முழு அளவில் வீழ்ந்துவிட்டது;

   விவசாயிகளுக்கு வங்கிகள் அளித்துவந்த கடன்கள் குறைந்து, கந்துவட்டிக் கொடுமையில் சிக்குவது அதிகரித்து வருகிறது; வேளாண்மைத் துறைக்கான அரசாங்க முதலீடுகள் குறைந்து வருவதோடு, தனியார் முதலீடுகள் அதனை ஈடு செய்யவில்லை. விளைவு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு செலவு குறைக்கப்பட்டு விட்டது; 

            ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை சீரழித்து - உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் சந்தை சக்திகளின் வர்த்தகச் சூதாட்டத்தில் தள்ளி வதைத்துவருவது; 

     மானியங்களை வெட்டியதன் விளைவாக உரம், பூச்சி மருந்துகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்து இடுபொருட்களின் விலை உயர்ந்து விட்டது. தனியார் நிறுவனங்களிடமிருந்து மரபணு நீக்கப்பட்ட விதைகள் அதிக விலைகொடுத்து வாங்குவது போன்ற காரணங்கள் உற்பத்திச் செலவை அதிகரித்து வருவது; 

   வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கான அளவு ரீதியான கட்டுப்பாடுகளை நீக்கி, சுங்க வரிகளைக்  குறைத்து, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுப் பொருட்களை மலிவான விலையில் கொட்டிக் குவிப்பது, விளை பொருட்களின் விலை குறைந்து உள்நாட்டு விவசாயிகளால் போட்டிப் போடமுடியாமல் விவசாயம் நலிவடைந்து வருவது; 

   விவசாயிகள் பணப்பயிர் உற்பத்திக்கு மாறுவதால் விவசாயிகளின் குடும்பத் தேவைக்கான உணவுப் பாதுகாப்பு அழிவதுடன், பல பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி சுற்றுச் சூழலை பாதித்து வருவது; 

            விவசாயிகளின் வருமானத்தைவிட செலவு அதிகரித்து, சொத்துக்களை விற்பதும், கடன்படுவதும், அடகுவைப்பதும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறுவதும் அதிகரித்து வருவதுடன், வேறு எந்த வேலையும் கிடைக்காமல் குடிபெயர்வு அதிகரிப்பதும், கடன் தொல்லையால் தற்கொலையால் மாள்வதும் தொடர்கிறது. 

மேற்கண்ட புதிய காலனிய வேளாண்மைக் கொள்கைகள் வேளாண்மைத் துறையில் அடிப்படையான முரண்பாடுகளைத் தீவிரமாக்கி வருவதை எடுத்துக் காட்டுகின்றன. புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவதால் விவசாயிகள் வாழ்வு நலிவடைவதும், அதிருப்தியும் தீவிரப்பட்டுக்கொண்டே செல்கிறது. இரண்டு மாநில விவசாயிகளும் வறட்சிக்கும் பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இரண்டு மாநில ஆளும் வர்க்கக் கட்சிகள் வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளிலிருந்து காப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த மறுக்கின்றன. நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி பேசவும் மறுக்கின்றன. மாறாக விவசாயிகளின் துன்பங்கள் அனைத்திற்கும் ஆற்று நீர்ப் பிரச்சினை குறித்த தீர்ப்புகள்தான் காரணம் என்று கூறி இனவெறியைத் தூண்டி இரண்டு மாநில விவசாயிகளையும் மோத விடுகின்றனர். 

விவசாயிகள் (அமைப்பாக்கப் படாததாலும், பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை புரிந்து போராடததாலும்) ஆளும் வர்க்கக்  கட்சிகளின் திசைதிருப்பும் பிரச்சாரத்திற்கு இறையாகி வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் தங்களது துன்பங்களுக்கானக் காரணங்களைப் புரிந்துகொள்ள காது கொடுத்து கேட்கவும் தயாரில்லை.

ஆனால், ஆளும் வர்க்கக் கட்சிகளோ, விவசாயிகளின் வீழ்ச்சிக்கு மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர்ப் பிரச்சினைதான் முக்கியக் காரணம் என்று ஏமாற்றுகிறார்கள். ஏனென்றால் விவசாயிகளின் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கானத் திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அதிருப்தி அடைந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, சதியையும் திசைதிருப்புவதையும் தவிர வேறொன்றும் இல்லை. நதி நீரில் பெரும் பகுதியைப் பெறுவதுதான் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும், அதைப் பிற மாநில விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொள்வதுதான் தீர்வு என்றும் இன வெறியை ஊட்டி பகைமையை வளர்க்கின்றனர்.

       இவ்வாறு மத்திய மாநில அரசுகள் புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் விவசாய நெருக்கடியிலிருந்து விவசாயிகளைத் திசைதிருப்பும் ஆளும்வர்க்கச் சதிகள் நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தடையாக மாறியுள்ளது.

       மேலும் புதிய தாராளக் கொள்கையின்படி தண்ணீர் தனியார் மயமாக்கும் கொள்கைகள் நதிநீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண்பற்குத் தடையாக இருக்கிறது. 

தண்ணீரில் பொது உரிமையை மறுக்கும் தனியார்மயம்

1991ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மின் துறையை தனியாருக்குத் திறந்துவிடும் கொள்கையை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக நீர் மின் உற்பத்தியும் கூட தனியாருக்குத் திறந்துவிடப்பட்டது. அதன் விளைவாக தனியார் நிறுவனங்கள் ஆற்று நீரைத் தேக்குவதற்கான அணைகளைக் கட்டவும், பராமரிக்கவும், இயக்கவும் உரிமை கொண்டாடவும் அனுமதிக்கப்பட்டது. ஆற்றின் மீது தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு அனுமதி அளித்தது. இந்தப் புதிய கொள்கைகள் தண்ணீர் தனியார் மயமாக்கலில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு ஆறுகள், குளங்கள், ஏரிகள் அரசாங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பொது உரிமையாகவும், தனியார் நிலங்களில் கிடைக்கும் நிலத்தடி நீர் தனியார் உடைமையின் கீழும் இருந்து வந்தது.

ஆனால், இன்றைய புதிய நிலைமைகளின் கீழ், மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பாக பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தண்ணீர் வணிகத்தில் கோக், பெப்சி, சூயெஸ், விவேண்டி, தேம்ஸ் வாட்டர் மற்றும்  பெக்டெல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை, தனி ஒரு விவசாயி பம்ப்செட் மூலம் நிலத்தடி நீரை எடுத்து விற்றதற்குப் பதிலாக, தற்போது பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் குளிர்பானங்கள் தயாரிப்பது, தண்ணீர் வியாபாரம் செய்வதற்காக கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெஹ்திகஞ்ச், தமிழகத்தில் தாமிரபரணி போன்ற இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்கின்ற நிலை உருவாகி உள்ளது.

இந்நிறுவனங்கள் ஏராளமான நிதி மற்றும் அரசியல் ரீதியில் மிகவும் வலிமை வாய்ந்தவைகளாகும். உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அதிகாரமிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள், அமெரிக்க ஏகதிபத்தியம் போன்றவை இவைகளின் பின்னணியில் உள்ளன. இவை எந்த ஒரு அரசாங்கத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தவும், அதன் கொள்கைகளை தீர்மானிக்கவும் வல்லமை மிக்க நிறுவனங்களாகும். 

பணம் மற்றும் கொள்ளை லாபமே தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கான பெரு இயக்கு சக்தியாக உள்ளன. மனிதகுலம் உள்ளவரை தண்ணீர் வியாபாரம் நெருக்கடி இன்றி வளர்ந்து கொண்டே இருக்கும். தண்ணீர் வியாபாரம் 400 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 3 டிரிலியன் டாலர் வரை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது வருடத்திற்கு ரூ.3,37,000 கோடியாக உள்ள முதலீடு வரும் காலத்தில் இது இரண்டரை மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.

தண்ணீர் தனியார் மயமாக்கல் மூலம் தண்ணீர்த் துறை சந்தையோடு இணைக்கப் படுகிறது. சந்தை விதிகளின்படி தண்ணீர் வழங்குவதற்கான முழு விலையையும் நுகர்வோர் கொடுக்க வேண்டும். காசில்லாத ஏழைகளுக்கு குடி தண்ணீரும் கிடையாது. ஏழைகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கங்களும் கூட ஓரம்கட்டப்பட்டுவிடும். விவசாயத்திற்கான தண்ணீரும் வியாபாரம் ஆகுமானால் நாட்டின் உணவுப் பொருள் விலையும் உயர்ந்து உணவுப் பாதுகாப்புக்கே குழி பறித்துவிடும்.

தண்ணீர் என்பது அடிப்படை மனித உரிமையாக ஆக்கப்படுவது ஒன்றுதான் அனைவருக்கும் தண்ணீர் என்ற உரிமையை நிலைநாட்ட வழியாகும். தண்ணீர் தனியார் மயத்தை ஒழித்து, அதன் மீதான நிலையான பொது உரிமையை நிலைநாட்டினால்தான் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த முடியும். உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தண்ணீருக்கான உரிமையை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாது, உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொது சொத்தாக மாற்ற வேண்டும். குடி நீர், விவசாயம்  உள்ளிட்ட அனைத்திற்கும்  அரசு பொறுப்பேற்க வேண்டும். அது ஒன்றுதான் அனைவருக்கும் தண்ணீரை உத்திரவாதப்படுத்தும்.

ஆனால் மத்திய மாநில அரசுகளும், ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஏகதிபத்திய வாதிகளின் தண்ணீர் தனியார் மயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இக்கொள்கைகளால்தான் நீரின் மீது பொது உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. ஆற்று நீர் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை நிறுவ முடியவில்லை. இவ்வாறு தண்ணீரை தனியார் உடைமை ஆக்கி பொது உரிமையை மறுப்பதால்தான் ஆற்று நீர் மீது சட்ட ரீதியாக அரசாங்கக் கட்டுப்பாட்டை கொண்டுவர மறுக்கின்றனர். நதி நீரை முறையாகப் பகிர்ந்து கொள்வதற்கான சட்டத்தைக் கொண்டுவரவோ, நடுவர் மன்றங்களை அமைக்கவோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை செயல்படுத்தவோ மறுக்கின்றனர். தண்ணீர் தனியார் மயமாக்கும் கொள்கையிலிருந்துதான் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை ஏற்க மறுக்கும் மோடி அரசின் மோசடிகளை புரிந்து கொள்ள முடியும்.

உண்மையில் நதி நீர்ப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக காவிரிச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால் ஜனநாயகமற்ற அரசியல் சட்டங்களைத் தூக்கியெறிய வேண்டும். இந்திய அரசு அமல்படுத்தி வரும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை ஒழித்துக்கட்டி நிலத்தின் மீதும், நீரின் மீதும் இறையாண்மையையும், அரசுக் கட்டுப்பாட்டையும் கொண்டுவரும் திட்டங்களையும், தண்ணீரை அடிப்படை மனித உரிமையாக மாற்றும் சட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். ஆறு, குளங்கள், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டை நிறுவ வேண்டும். தேசிய இனங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தங்களுக்குள் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குத் தடையாக தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள இந்திய அரசிலிருந்து பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய கூட்டாட்சி அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் வறட்சியிலிருந்து நாட்டு மக்களை காக்க நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நான்கு மாநில விவசாயிகளையும், ஜனநாயகச் சக்திகளையும் உள்ளடக்கிய அதிகாரமுள்ள மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதை ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசுதான் சாதிக்கும்.

அதற்குத் தயாராகும் அதே வேளையில், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஹெல்சிங்கி சமபங்குக் கோட்பாட்டு அடிப்படையில் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், தண்ணீரைத் தனியார் மயமாக்கும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், கர்நாடகா தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும், கீழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

* காவிரி உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகள் தீராததற்குக் காரணம் இந்திய அரசு கடைப்பிடிக்கும் புதியகாலனிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளே!
* உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை எதிர்க்கும் மோடி ஆட்சியையும், கர்நாடக அரசையும் எதிர்ப்போம்!
* உடனடியாகக் காவிரி நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடு!
* நான்கு மாநில விவசாயிகளையும், ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் போராடுவோம்!
* அநீதியான நீர்ப் பகிர்வால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கு!
* கர்நாடகத்தில் தமிழர்களின் மீது தாக்குதல் தொடுக்கும் கன்னட இன வெறியர்கள் மீது நடவடிக்கை எடு! தமிழர்களுக்குப் பாதுகாப்பு கொடு!
* தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய அரசை தூக்கியெறிவோம்!
* பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனங்களின் கூட்டாட்சிக்காகப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Sunday, September 4, 2016

செப்-12, தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவுநாள் வாழ்க!!

செப்-12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவுநாள் வாழ்க!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

செப்-12, புரட்சித் தோழர் பாலன் கொல்லப்பட்ட நாள். அந்நாளை இந்தியத் திருநாட்டின் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகப் போராடி உயிர்நீத்த அனைத்துப் புரட்சித் தியாகிகளின் கனவுகளை நனவாக்கச் சூளுரைக்கும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம். இவ்வாண்டு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும், புதிய காலனியாதிக்கத்திற்கும் சேவை செய்து, நாட்டில் இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்ப்போம்

சோவியத் சமூக ஏகாதிபத்திய வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய அரசு கூட்டு சேரா கொள்கையை கைவிட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கும், இந்திய நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகளை இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்துத்துவ மோடி ஆட்சியோ அதே கொள்கைகளை மிகவும் மூர்க்கத்தனமாக அமல்படுத்தி வருகிறது.

மோடிகும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அமெரிக்கா சென்ற இந்திய இராணுவ அமைச்சர் மனோகர் பரிக் அமெரிக்காவுடன் “இராணுவத் தளவாடங்கள் பரிமாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்” (லிணிவிளிகி) கையப்பமிட்டார். இதன் மூலம் அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நட்புநாடாக இந்தியா மாறி விட்டதாக அறிவித்துள்ளது. அதாவது “சர்வதேச அளவில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு இரண்டு நாடுகளும் உறுதி பூண்டுள்ளதாக” கூறுவதன் மூலம், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான இராணுவக் கூட்டணியின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்திற்குச் சவாலாக உள்ள சீனாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஜப்பானின் இராணுவக் கூட்டணியில் இந்தியாவை இணைப்பது என்ற அமெரிக்காவின் திட்டத்திற்கு மறைமுகமாக மோடிகும்பல் இணங்கி விட்டதற்கான அறிகுறியாகவே தெரிகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்போக்கு உருவாகும் நிலையை உருவாக்கி தென்னாசியாவில் போர்ப் பதற்றத்தை உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் போர்த்தளவாடங்களை விற்பது உள்ளிட்ட இந்தியப் பொருளாதாரத்தை இராணுவப் பொருளாதாரமாக மாற்றுவதுடன் அமெரிக்க கம்பெனிகள் பல ஆயிரம் கோடிகள் இலாபம் ஈட்டவும் மோடி ஆட்சி துணைபோகிறது. எனவே அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற போராடுவதே இப்பிராந்தியத்தின் அமைதிக்கு வழியாகும்.

புதிய தாராளக் கொள்கைகளும் இந்திய மக்களின் துயரமும்

இந்திய அரசு கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தி வரும் புதிய தாராளக் கொள்கைகள் நாட்டை ஓட்டாண்டியாக்கி வருகிறது. இத்தகைய நாசகாரக் கொள்கைகளை மோடி ஆட்சி மூர்க்கத்தனமாக அமல்படுத்தி வருகிறது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை இரயில்வே, பாதுகாப்பு, வங்கிகள், போக்குவரத்து, சுரங்கம் என அனைத்துத் துறைகளிலும் நூறு சதவீதம் அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டுள்ளது. இயற்கை மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையிடுவதற்கான பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றிவிட்டது.

விண்ணை முட்டும் விலை உயர்வுகள், வேலையின்மை பெருகிக் கொண்டே செல்லுதல், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு மக்கள் மீது பொருளாதார நெருக்கடியின் சுமைகள் சுமத்தப்படுகின்றன.

தொழிலாளர்களின் ஊதியம் 1982-83 ஆம் ஆண்டுகளில் தொழிற்துறை முதலீட்டில் 30 சதவீதமாக இருந்தது, 2012-13 ஆம் ஆண்டில் வெறும் 12.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. தொடர்ந்து கூலி குறைந்து கொண்டே போகிறது. ஆனால் முதலாளிகளின் இலாபச் சதவீதமோ அதே காலப்பகுதியில் 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்ந்துவிட்டது. தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ உயர்ந்து கொண்டே போகிறது. எட்டு மணிநேர வேலை நாள் 12 மணி நேர வேலை நாளாக மாறிவிட்டது. அரசாங்கத்தில் பணிபுரியும் அங்கன்வாடி, சத்துணவு, மதிய உணவுத் திட்டப் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் என்ற பேரால் உழைப்பு சுரண்டல் பெருகுகிறது.

அடிமைகளாய், அத்துக் கூலிகளாய், அடுத்த வேளை உணவுக்கே என்ன செய்வது என்று தவிக்கும் அன்றாடங் காய்ச்சிகளாய் வெந்ததைத் தின்று வாழும் 93 சதவீத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டம் கொண்டுவர மோடி ஆட்சி மறுக்கிறது. ஆனால் அந்நிய முதலீட்டைக் கவர்வது என்ற பேரில் இருக்கும் உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக மாற்றி வருகிறது. ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் தொழிற்சாலைச் சட்டம், தொழிலாளர் சட்டம் என 44 சட்டங்களை 5 ஆகக் குறைத்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டது.

மேலும், பாரம்பரியமான கைத்தறி, விசைத்தறி, முந்திரி, கயிறு, கைவினைப் பொருட்கள் போன்ற சிறு குறு தொழில்களும், சில்லறை வணிகம் போன்றவையும் அரசாங்கத்தின் கொள்கைகளால் அழிந்து பல கோடி பேர் வேலையிழந்து வீதிகளில் திரிகின்றனர்.

வேளாண்மைத் துறையில் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களை அனுமதித்து வேளாண்மைக் குழுமமயத்தை மோடி கும்பல் தீவிரப்படுத்துகிறது. நில உச்சவரம்பைத் தளர்த்தி மான்சாண்டோ, ராக்பெல்லர், கார்கில், ரிலையன்ஸ், டாட்டா, ஐடிசி போன்ற அமெரிக்கப் பகாசுரக் கம்பெனிகளும் உள்நாட்டு நிறுவனங்களும் 1000 ஏக்கர் பெரும் பண்ணைகள் அமைப்பது தொடர்கிறது. வேளாண் உற்பத்தி, ஆராய்ச்சி, வர்த்தகம் அனைத்திலும் அமெரிக்கக் கம்பெனிகள் தங்களது ஆதிக்கத்தை நிறுவி வருகின்றன. காலை முதல் இரவு வரை நம் பசிக்காகவும், வாய் ருசிக்காகவும், ஆற்றல் பெறவும், நோய் தடுப்பு பெறவும் நாம் சாப்பிடும் உணவாகட்டும் அல்லது ஊக்க உணவாகட்டும் அனைத்தும் அந்நிய நாட்டு பிடியில் சிக்கிக்கொண்டுவிட்டன. நாம் எதை விதைக்க வேண்டும், எதை உண்ண வேண்டும் என்பதை அமெரிக்கக் கம்பெனிகளே தீர்மானிக்கின்றன.

ஆனால், இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் நம்பி இருக்கும் விவசாயத்திற்கும், அதற்கு உதவும் பாசனத்திற்கும், விதைப் பண்ணைக்கும், உரத் தொழிலுக்கும் அரசு முதலீட்டை, மானியத்தை படிப்படியாகக் குறைத்து, தனியார்மயத்தை அனுமதித்து விவசாயிகளின் உற்பத்திச் செலவை அதிகரிக்கச் செய்து, அதே நேரத்தில் உள்நாட்டில் பயிராகும் விளைபொருட்களை ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவான விலைக்கு தங்குதடையின்றி இறக்குமதி செய்து கொட்டிக் குவித்ததனால் உள்நாட்டு விவசாயிகள் போட்டி போட முடியாமல் நஷ்டமடைந்து கடனாளியாக மாறுகின்றனர். கந்துவட்டி, வங்கிக் கடன் தொல்லை தாங்காமல் கடந்த 15 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். புதிய காலனிய கார்ப்பரேட் விவசாயக் கொள்கைகள் விவசாயிகளின் தூக்குக் கயிறாக மாறியுள்ளது.

அடுத்து மோடியின் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்த போதிலும்கூட அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, பால் போன்றவற்றின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த விலையுயர்வுகள் எல்லாம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டதாகும். அந்நிய நாட்டு நிறுவனங்களும், வர்த்தகச் சூதாடிகளும் (ஆன்லைன் வர்த்தகம்) பொருட்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு ஊகவாணிபம் செய்ய மோடி கும்பல் அனுமதித்ததுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும். மோடி ஆட்சியில் அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் வர்த்தகச் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டன. ஆனால் ஏழை-எளிய மக்களுக்கோ சத்துணவுப் பற்றாக்குறை, பட்டினி சாவுகள்தான் பரிசாகக் கிடைத்துள்ளன.

சமூக நலத்திட்டங்களுக்கு மூடுவிழா

அரசாங்கத்தின் நிதி பற்றாக் குறையை கட்டுக்குள் வைப்பது என்ற பேரில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சமூக நலத்திட்டங்களை தனியார்மயமாக்கி வணிகமயமாகுவதை மோடி கும்பல் தீவிரப்படுத்துகிறது.

மோடி ஆட்சி கல்விக்கான நிதியை, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கவேண்டும் என்ற கோத்தாரி கமிஷனின் கோரிக்கையை ஏற்கத் தயாரில்லை. இவ்வாண்டு வெறும் 3.4 சதவீதம்தான் ஒதுக்கியுள்ளது. உயர்கல்வி மட்டுமல்ல, பள்ளிக் கல்வியையும் முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டது.

அண்மையில் மோடி கும்பல் முன்வைத்துள்ள புதிய கல்விக் கொள்கை என்பது உயர்கல்வியை பன்னாட்டு பல்கலைக் கழகங்களிடம் ஒப்படைத்துவிட்டு, பள்ளிக் கல்வியைத் தனியார் மயம் வணிகமயமாக்குவதுடன் காவிமயமாக்கும் திட்டமேயாகும்.

தேச ஒற்றுமையைக் காப்பது என்ற பேரில் பள்ளிக் கல்வியை மத்தியப் பட்டியலுக்கு கொண்டு சென்று நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் எனும் பாசிசத் திட்டம்; எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி என்பதை நான்காம் வகுப்பு என மாற்றி ஏழை-எளிய மாணவர்களை பள்ளியைவிட்டு விரட்டியடிப்பது; திறன் மேம்பாடு என்று கூறி 9 ஆம் வகுப்பிலேயே தொழிற்பயிற்சி அளித்து ஏழை மாணவர்களை வேலைக்கு அனுப்புவது, குழந்தைத் தொழிலாளர் முறையை உருவாக்குவதுடன் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி கிட்டாமல் ஆக்குவது; தேசிய அளவில் பள்ளிகளுக்கு தரச் சான்று அளிப்பது என்ற பேரால் அரசுப் பள்ளிகளை மூடிவிடுவது; மதிய உணவுத் திட்டத்திலிருந்து அரசு விலகிக் கொண்டு தனியார் தர்ம ஸ்தாபனங்களை அனுமதித்ததன் மூலம் தனியார் மயத்தைத் திணிப்பது; உயர்கல்வி நிறுவனங்களை இனி அரசு துவங்குவதில்லை மாறாக வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிடம் ஒப்படைத்துவிடுவது; இறுதியாக இந்தியக் கலாச்சாரத்தைப் போதிப்பது என்ற பேரில் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணிப்பது, வேதக் கல்வியை வழங்குவது என்று கல்வியைக் காவிமயமாக்குவது. சுருக்கமாகக் கூறினால் குருகுலக் கல்வியைத் திணிப்பதே.

அன்று, மெக்காலேக்கு தேவைப்பட்டது உடலால் இந்தியனாக உள்ளத்தால் பிரிட்டிஷாருக்கு கணக்குப்பிள்ளைகளை உருவாக்கும் கல்வி; நேற்று, ராஜீவ்காந்திக்கு தேவைப்பட்டது பில்கேட்சுக்கு வேலையாட்களை உருவாக்குவது; இன்று, மோடிக்கு தேவைப்படுவது உள்ளத்தால் இந்து மதவெறியும், உடலால் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கொத்தடிமை வேலை செய்ய, குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கும் குருகுலக் கல்வி அவ்வளவுதான்.

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடனேயே நிதிப் பற்றாக் குறையை குறைப்பது என்ற பேரில், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 20 சதவீதம் குறைப்பதாக முடிவுசெய்தது. 2015-16 ஆம் ஆண்டிற்கான சுகாதாரம், குடும்ப நலம் இரண்டுக்கும் சேர்த்து ரூ.5000 கோடிதான் கூடுதலாக ஒதுக்கியது. தேசியச் சுகாதார நிறுவனத்தின் குறைந்தபட்ச மதிப்பீட்டின்படி இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களுக்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் 2.5 சதவீதம், அதாவது தற்போதைய ஒதுக்கீடான ரூ.37,061 கோடியிலிருந்து இருமடங்கு ரூ.74,122 கோடி ஒதுக்கிடு செய்யவேண்டும். ஆனால் கிராமப்புற சுகாதாரத்திற்கு நிதியைக் குறைத்து காப்பீட்டுத் திட்டத்தைப் பரவலாக்கி தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு வழிவகுக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பிணத்தை எடுத்துப்போக ஊர்தியின்றி தோளில் சுமக்கும் கொடுமை நாட்டில் பெருகும் அவலம். அத்துடன் உயிர்காக்கும் 343 மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டை 74 மருந்துகளுக்கு எனக் குறைத்ததை மோடி கும்பல் ஏற்றுக்கொள்கிறது, இதன் மூலம் பன்னாட்டு கம்பெனிகள் உயிர்காக்கும் மருந்துகளின் விலைளை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. ஏழைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் எட்டாக்கனியாகி நோயால் மாள்கின்றனர்.

இவ்வாறு மோடி கும்பல் புதியதாராளக் கொள்கைகளை அமல்படுத்தி தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரின் மீதும் கொடிய தாக்குதலை தொடுத்து வருகிறது. அது நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை உருவாக்கி குறைந்த காலத்திலேயே மோடி கும்பல் செல்வாக்கிழந்துவிட்டது. மோடி கும்பலின் தேசவிரோதக், மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அலையலையாகப் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். மோடி கும்பலோ இத்தகைய மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும், பிளவுபடுத்தி திசைதிருப்பவும் ஆர்.எஸ்.எஸ் காவிக் காடையர்கள் மூலம் இந்து மதவெறிக் கலவரங்களை நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடுகிறது.

அன்று அத்வானி தலைமையில் பாபர்மசூதி இடிப்பின் மூலம் இந்துமதக் கலவரத்தை தூண்டிய பா.ஜ.க, இன்று மோடி தலைமையில் “பசு பாதுகாப்பு” என்ற பேரில் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், இசுலாமிய மற்றும் கிறித்துவ சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகவும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். குஜராத்தில் உனா நகரில் தலித்துகள் மீது நடந்த தாக்குதல் போல அம்மாநிலத்தில் ஆண்டுக்கு 1500 தாக்குதல்கள் நடக்கின்றன. உத்திரப் பிரதேசத்தில் 8000 தாக்குதல்கள் நடக்கின்றன. நாடு முழுவதும் தலித்துகள் மீதும் இசுலாமியர்கள் மீதும் காவிக் கும்பல் நடத்தும் இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சம உரிமை மறுப்பு, வழிபாட்டு உரிமை மறுப்பு, பொது உரிமை மறுப்பு மற்றும் ஆணவக் கொலைகள் என தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. இந்து மதவெறியர்களும் சாதி வெறியர்களும் கூட்டுச்சேர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

இந்துத்துவப் பாசிசம் சிறுபான்மை மதத்தினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக மட்டும் இத்தகைய தாக்குதல்களை நடத்தவில்லை. இந்து ராஷ்டிரம் என்ற பேரில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் மீதும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீதும் தாக்குதல் நடத்துவதாகும். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதத்தை பிற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பதுமாகும்.

இந்திய அரசு தேசிய சுயநிர்ணயத்திற்கான போராட்டங்களை பிரிவினை வாதம் என்று கூறி இராணுவத் தாக்குதல்கள் மூலம் ஒடுக்குகிறது. அதற்கு இந்துத்துவப் பாசிசம் தத்துவத்தை வழங்குகிறது. இந்திய அரசு, காஷ்மீர் இணைப்பின் போது அம்மக்களுக்கு அளித்த கருத்துக் கணிப்பு நடத்தி தனிநாடு அமைப்பது பற்றி முடிவெடுப்பது என்ற வாக்குறுதியை மறுத்துவிட்டது. அரசியல் சட்டம் 370 வழங்கிய சிறப்பு அந்தஸ்தையும் படிப்படியாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது. இராணுவத்தின் துணைகொண்டு பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை இரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. தற்போது 50 நாட்கள் ஊரடங்கு அறிவித்தும் கூட அம்மக்களின் போராட்டம் ஓயவில்லை. மோடி ஆட்சியோ அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் தீர்வு என்று கூறி அரசு வன்முறை மூலம் தீர்வு காண முயல்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட வடகிழக்கு மக்களின் தேசியக் கோரிக்கையை அடக்க இராணுவத்திற்கு எல்லையில்லா அதிகாரத்தை (சிறப்பு இராணுவ அதிகாரச் சட்டம்) வழங்கி, அம்மக்கள் மீது சட்டவிரோதமாகப் போலி மோதல் கொலைகளையும், கற்பழிப்புகளையும் அரங்கேற்றி வருகிறது. ஒரு ராணுவ ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அத்தகைய கருப்புச் சட்டதை திரும்பப் பெறவேண்டும். காஷ்மீரிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெற்று கருத்துக் கணிப்பு நடத்துவது ஒன்றுதான் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாகும்.

எனவே இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதை எதிர்த்தும், இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் போராடுவது நாட்டு மக்களின் முதன்மையான கடமையாக மாறிவிட்டது. இன்றைய இந்துத்துவப் பாசிசம் என்பது புதிய காலனியத்திற்குச் சேவை செய்யும் ஒரு கார்ப்பரேட் பாசிசமாகும். எனவே மோடி கும்பல் அமல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்ப்பதிலிருந்து அதன் மதவெறிப் பாசிசத்தை பிரிக்கமுடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தையும் இணைத்துப் போராடுவது ஒன்றுதான் பாசிசத்தை வெல்லுவதற்கான ஒரே வழியாகும்.

காங்கிரசின் சமரசம்

நாடாளுமன்ற எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சி என்றும் எனவே காங்கிரஸ் கட்சியோடு கூட்டு சேர்ந்து இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்துப் போராடினால்தான் வெல்லமுடியும் என்று சிலர் அண்மைக் காலங்களில் பேசி வருகின்றனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் மத்தியில் ஆளும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கட்சிகளேயாகும். காங்கிரஸ் கட்சியோ புதிய தாராளக் கொள்கைகளைத் துவங்கி வைத்த கட்சியாகும். அமெரிக்காவுடனான இந்திய அரசின் யுத்ததந்திரக் கூட்டணியை போட்டி போட்டுக்கொண்டு அமல்படுத்தும் கட்சியாகும். அத்துடன் அண்மைக் காலங்களில் ஜி.எஸ்.டி. சட்டம் உட்பட மோடி அரசு செயல்படுத்தும் புதிய தாராளக் கொள்கைகளுக்கும், காஷ்மீர் உள்ளிட்ட தேசிய ஒடுக்குமுறைகளைக்கும் வெளிப்படையாக ஆதரவு கொடுத்து கூடிக் குலாவுகிறது. இந்த துரோகத்துக்கெல்லாம் உரிமை கோருகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சியல்ல. மாறாக அது இந்து மதவாதத்தை காரியவாதமாகப் பயன்படுத்துகிறது. “இந்துத்துவமே மதச் சார்பின்மைக்கு மிகச் சக்தி வாய்ந்த பாதுகாவலன்” என்று அக்கட்சி தீர்மானமே போட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் இந்து மதவாதத்தைப் பயன்படுத்தி ஒடுக்குவதிலும், பஞ்சாபில் சீக்கிய மதவாதத்தைத் தூண்டி பிந்தரன்வாலேவை வளர்த்து, பொற்கோவிலில் புளூஸ்டார் இராணுவ நடவடிக்கை எடுத்து, பின்னர் அதே மதவெறிக்கு இந்திராகாந்தி பலியானது, 1992-ல் பாபர் மசூதி இடிப்பிற்கு துணைபோனது, பின்பு பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்தது. எனவே காங்கிரசு கட்சியும் மதவாதத்தைப் பயன்படுத்தும் கட்சிதான். சாதி, தீண்டாமை ஒழிப்பு பிரச்சினையிலும் அக்கட்சி ஒரு சந்தர்ப்பவாத நிலைபாட்டையே எடுக்கிறது. இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்குபெறுவது என்பது ஒரு மோசடியேயாகும். எனவே காங்கிரஸ் கட்சியை தனிமைப் படுத்துவதன் மூலம் மட்டுமே இந்துத்துவப் பாசிசத்தை வெல்லமுடியும்.

திராவிடக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம்

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வோ, அல்லது வலிமையான எதிர்க் கட்சியாக உருவாகியுள்ள தி.மு.க-வோ இரண்டு கட்சிகளுமே அமெரிக்காவின் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை அமல் படுத்துவதிலும், அந்நிய மூலதனத்தின் வேட்டைக்காடாக தமிழகத்தை மாற்றுவதிலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதிலும் போட்டிபோடும் கட்சிகள்தான். தமிழ் நாட்டு மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளான நதிநீர்ப் பிரச்சினையோ, கல்வியை மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்லும் பிரச்சினையோ, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்புப் பிரச்சினையோ அல்லது டாஸ்மாக்கை மூடும் பிரச்சினையோ எந்த ஒரு பிரச்சினையிலும் இக்கட்சிகள் ஒன்றுபட்டு போராடத் தயாரில்லை. இப்பிரச்சினைகளை எழுப்பக் கூடாது என்பதில் இக்கட்சிகள் திரைமறைவில் உடன்பாடு கொண்டுள்ளனர். ஆனால், சட்டசபையில் இரு கட்சிகளின் தலைவர்களை ஒருமையில் பேசுவது என்றப் பிரச்சினையைக் காட்டி வெளிநடப்பு செய்வது அல்லது வெளியேற்றுவது என இக்கட்சிகள் மக்களை திசை திருப்புகின்றன. ஜெயலலிதாவோ எல்லாவிதமான ஜனநாயக நெறிமுறைகளையும் அழித்து இலவசத் திட்டங்கள் என்ற மாயையில் மக்களை ஆழ்த்தி, டாஸ்மாக் போதையில் ஆழ்த்தி ஆட்சியில் தொடரலாம் எனக் கனவுகாண்கிறார். இது கனவுகள் கலையும் காலம்.

எனவே, இந்துத்துவ மோடி ஆட்சி அமெரிக்காவின் புதியகாலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், இந்து மதவெறிப் பாசிசத்தை எதிர்த்தும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தேசபக்த ஜனநாயகச் சக்திகள் ஒன்றுபட்டு ஒரு மக்கள் அணியை கட்டியமைக்க அணிதிரள்வோம் என இந்தத் தியாகிகள் நினைவு நாளில் அறை கூவி அழைக்கிறோம்.

* அந்நிய மூலதனத்திற்கும், அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்திற்கும் சேவை செய்வதே      இந்துத்துவப் பாசிசம்!

* உலக மேலாதிக்க அமெரிக்காவின் “இளைய பங்காளி”, இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை    எதிர்த்துப் போராடுவோம்!

* இந்துத்துவப் பாசிச ஆட்சியுடன் “கூடிக்குலாவும்” பாசிச காங்கிரசை தனிமைப்படுத்துவோம்!

* அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே அந்நிய மூலதனத்திற்கும், இந்துத்துவப் பாசிசத்திற்கும்  துணைபோகும் கட்சிகளே!

* ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு மக்கள் அணியைக் கட்டுவோம்!
 வங்கிகள், காப்பீடு, இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை  எதிர்த்துப் போராடுவோம்!

* கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் அரசின் பொறுப்பை கைவிட்டு வணிகமயமாக்குவதை எதிர்த்து  முறியடிப்போம்!

* புதிய காலனிய “கார்ப்பரேட்” வேளாண்மைக் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச்  சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

* தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்காகப்  போராடுவோம்!

* காஷ்மீரில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து! படைகளை திரும்பப் பெறு!

* சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!

* ஆங்கில, இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்ப்போம்!

* தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்கப் போராடுவோம்!

* மத, சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவோம்! சாதிகளற்ற சமதர்ம  சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக  இளைஞர் கழகம், தமிழ்நாடு.
செப்டம்பர். 2016